சிங்கப்பூர்:
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் எதிரிகளாக இருந்த இரண்டு நாடுகளின் தலைவர்கள் முதல்முறையாக சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடகொரியா – அமெரிக்கா இடையிலான அமைதி உறவுகளுக்கான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில், வடகொரியாவின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் விளைவிக்கமாட்டோம் என்றும் தென்கொரியா உடனான போர் பயிற்சிகளை நிறுத்திக் கொள்வோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியளிக்க, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதம் இல்லாத பிரதேசமாக மாற்றும் வகையில் வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடும் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உறுதியளித்திருக்கிறார்.சிங்கப்பூர் பேச்சுவார்த்தை உலகிற்கு அமைதியை உத்திரவாதம் அளித்திருக்கிறது என்றால் மிகையல்ல. அமைதியைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லை என்பதையும் உறுதி செய்திருக்கிறது. சோசலிசத்தை உயர்த்திப் பிடிக்கும் எந்தவொரு நாடும் உலகிற்கு அமைதியை மட்டுமே பரிசாக வழங்கும்; யுத்தத்தை அல்ல என்று உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதற்கு முன்பும் தற்போதும் முழங்கி வருவதை உறுதிசெய்யும் விதத்தில், கொரிய தொழிலாளர் கட்சியின் தலைமையிலான கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (சோசலிச வடகொரியா) அணு ஆயுதங்களை கைவிட்டு – தனது பாதுகாப்பை உறுதி செய்து – ஏகாதிபத்திய அமெரிக்காவை பேச்சுவார்த்தை மேஜைக்கு வரவழைத்து – அமைதியை பரிசாக அளித்திருக்கிறது.

சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவில் அமைந்துள்ள கெம்ப்பெல்லா ஹோட்டலில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் – ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் செவ்வாயன்று சந்தித்து இந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தினர்.40 நிமிட நேரம் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தினர். பலமுறை கைகுலுக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற விரிவடைந்த பேச்சுவார்த்தையும் அதன்பின்னர் இருநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற மதிய விருந்தும் நடைபெற்றன.
விரிவடைந்த பேச்சுவார்த்தையில், வடகொரியாவின் மூத்த தலைவர்களும் கொரிய தொழிலாளர் கட்சி மத்தியக்குழுவின் துணைத் தலைவர்களுமான கிம் யோங் சோல், ரீ சூ யோங் மற்றும் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரீ யோங் ஹோ ஆகியோர் பங்கேற்றனர்.

அமெரிக்க அரசுத் தரப்பில் வெள்ளை மாளிகை நிர்வாகத் தலைவர் ஜான் ஹெல்லி, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் மற்றும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக ஹெம்ப்பெல்லா ஹோட்டலின் தோட்டத்தில் உரையாடிக் கொண்டு பேச்சுவார்த்தை அரங்கிற்குள் வந்த கிம் – டிரம்ப், தங்களுக்கிடையே ஒரு மிகச்சிறந்த அரசுத் தரப்பு உறவு உருவாகியுள்ளது என்று தெரிவித்தனர். இது ஒரு துவக்கம்தான் என்று கிம்-மின் கைகளைப் பற்றியவாரே டிரம்ப் தெரிவித்தார். இப்படி ஒரு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான பாதை எளிதானதாக இருக்கவில்லை என்று குறிப்பிட்ட கிம், அனைத்து தடைகளையும் வெற்றிகரமாக தாண்டி, இருதரப்புமே நட்பு பாராட்ட முடியாது என்று நீடித்து வந்த பழைய கருத்துக்களை தகர்க்கும் விதமாக உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.உலகெங்கிலும் இருந்து கேம்ப்பெல்லா ஹோட்டலில் குவிந்திருந்த 3ஆயிரத்திற்கும் அதிகமான ஊடகங்களது கேமிராக்கள் முன்பு இருவரும் கைகுலுக்கிய வண்ணம் இருந்தனர். இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் கூட்டுப் பிரகடனத்தில் கிம்மும் டிரம்ப்பும் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்பாட்டில், வடகொரியாவுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் தருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டிருக்கிறார்; அதற்கு கைமாறாக கொரிய தீபகற்பகத்தை முற்றாக அணு ஆயுதம் இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு கிம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கொரிய தீபகற்பத்தை அமைதி பிரதேசமாக மாற்றுவதை நோக்கி வடகொரியா – அமெரிக்கா இடையிலான உறவு இனி அமையும் என்றும் இது தொடர்பான ஒருங்கிணைந்த உண்மையான முயற்சிகளை இருதரப்பும் மேற்கொள்ளும் என்றும் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
வடகொரிய மக்களும் அமெரிக்க மக்களும் அமைதியையும் வளர்ச்சியையுமே விரும்புகிறார்கள்; அந்த மக்களது விருப்பங்களின் அடிப்படையில் இரு நாடுகளிடையே புதிய உறவுகள் அமையும் என்றும் கூட்டுப் பிரகடனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதன் மூலம் உலகிற்கே அமைதி எனும் செய்தியை விடுப்பதாகவும், அணு ஆயுதங்களை கைவிடுவதன் மூலமாக இருதரப்பும் பரஸ்பரம் நம்பிக்கையை உறுதிசெய்து கொள்வது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 27 அன்று வடகொரிய – தென்கொரிய எல்லையில் அமைந்துள்ள பன்முஞ்சம் கிராமத்தில், வடகொரிய ஜனாதிபதி கிம்-மும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெ-இன்-னும் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வடகொரியா – தென்கொரியா இடையே அமைதியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என ஒப்புக் கொண்ட பிரகடனத்தை கிம் – டிரம்ப் பேச்சுவார்த்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது என்றும் சிங்கப்பூர் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1950-53 காலத்தில் நடைபெற்ற கொரிய யுத்தத்தில் காணாமல் போன இருதரப்பு வீரர்களின் உடல்களை தற்போது கண்டுபிடித்து பரஸ்பரம் கொடுத்துவிடுவது; அவர்களுக்கு உயரிய மரியாதை அளிப்பது என்றும் கூட்டுப்பிரகடனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரகடனத்தை இரு நாடுகளும் உளப்பூர்வமாகவும் எவ்வித பகைமையை தூண்டிவிடாத வகையிலும் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைதி என்பது, ஆசியாவின் அமைதிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் பதற்றம் தணிந்திருப்பது என்பது உலகின் அமைதிக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று உலக நாடுகள் இந்த பேச்சுவார்த்தையை பாராட்டியுள்ளன. இருநாடுகளும் தொடர்ந்து இதை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.