திருப்பூர்,
கடந்த ஏப்ரல் மாதம் கொடுவாய் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் மர்மநபர்கள் நகை வழிப்பறி செய்ததுடன், பெண்ணை கீழே தள்ளியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் இந்த சம்பவத்தில் இரண்டு மாதங்களாக குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அவிநாசிபாளையம் காவல் துறையினர் மறுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் செஞ்சேரிப்புத்தூரைச் சேர்ந்த விவசாயி நா.வெங்கடேஸ்வரன். இவரும், இவரது மனைவி விஜயலட்சுமியும் (வயது 46) கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளைய் பெருந்தொழுவு அருகில் உள்ள கவுண்டம்பாளையத்தில் உறவினர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். காலை 8.15 மணியளவில் இவர்கள் கொடுவாய் அருகே தனியார் பால்பண்ணை வழியாக நெடுஞ்சாலையை வந்தடைந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர். சற்றும் எதிர்பாராத நிலையில் வழிப்பறி முயற்சி நடைபெற்றபோதும், விஜயலட்சுமி சங்கிலியை கையில் பற்றிக் கொண்டு போராடியிருக்கிறார். ஆனால் கொள்ளையர்கள் விசையுடன் இழுத்ததில் சங்கிலி துண்டானதுடன், இருசக்கர வாகனத்தில் இருந்து விஜயலட்சுமி பின்புறமாக கீழே விழுந்துவிட்டார்.

இதில் அவருக்கு தலை, கழுத்து, முதுகுத்தண்டுவடத்தில் படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு விஜயலட்சுமியை சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் விவசாயி வெங்கடேஸ்வரன் அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று, தனது புகாரின் அடிப்படையில், மர்ம நபர்கள் மீது வழிப்பறி, கொலைமுயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துதரும்படி கேட்டிருக்கிறார். ஆனால் காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் பொறுத்திருக்கும்படி கூறியுள்ளார்.

மே 1 ஆம் தேதியும், 16ஆம் தேதியும் மீண்டும் காவல்நிலையம் சென்று கேட்டபோதும் உரிய பதில் தெரிவிக்காமல் குற்றவாளியைப் பிடித்துவிடுவோம் என்று சொல்லி ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்துவிட்டார்.கொள்ளையர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதுடன், விஜயலட்சுமியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய கொலைமுயற்சி நடைபெற்று இருக்கும் நிலையில் காவல் துறையினர் புகார் பதிவு செய்ய மறுப்பதால் வெங்கடேஸ்வரன் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். மனைவிக்கு பல லட்சம் செலவு செய்து மருத்துவ சிகிச்சை அளித்திருக்கும் நிலையில் இந்த கொடூர குற்றச்செயலை நிகழ்த்திய குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க காவல் துறையினர் புகார் பதிவு செய்யாததால் அவர் மனவேதனை அடைந்துள்ளார். இது குறித்து கடந்த ஜூன் 4ஆம் தேதி பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு பதிவுத் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார். எனினும் கடந்த ஒரு வார காலமாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து யாரும் குறைந்தபட்சம் அழைத்துக்கூட பேசவில்லை என்று விஜயலட்சுமியின் மகன் கார்வேந்தன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: