“இந்தியா முதல்” –  அதாவது நாட்டில் எல்லாவற்றிற்கும் மேலாக நமது நாடு என்று கூறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி சளைப்பதே இல்லை.  அவருடைய  2014 தேர்தல் அறிக்கையிலும் மற்றும் அப்போது அவரால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திலும்   நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை,  மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருத்தல், அரசமைப்புச்சட்டத்தை உயர்த்திப்பிடித்தல் மற்றும்  “வீர்யம் மிகுந்த மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தைக் கட்டுதல் முதலானவைகள் குறித்துத் திரும்பத்திரும்பப் பேசி வந்தார். எனினும்,  ஆட்சிக்கு வந்த பின்னர் , பாஜக அரசாங்கம் தன்  சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. நாட்டின் அரசமைப்புச்சட்டத்தை   அது கிஞ்சிற்றும் மதிப்பதே கிடையாது.  அவ்வப்போது அதனைத் துஷ்பிரயோகம் செய்து வருகிறது.  நாட்டில் நன்கு நிறுவப்பட்டிருந்த நாடாளுமன்ற நடைமுறைகளையும்,  ஆட்சி பரிபாலன நடைமுறைகளையும் மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  நீதித்துறை,  அதிகார வர்க்க அமைப்பு,  ஆயுதப் படைகள்,  இந்திய ரிசர்வ் வங்கி,  மத்திய விஜிலன்ஸ் கமிஷன்,  தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் போன்ற அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் நேரடியான   அமைப்புகள் ஆகிய அனைத்தையும் மண்டியிட வைத்திருக்கிறது,  மோடியின் கட்டளைகளுக்கு இணங்க செயல்பட வைத்திருக்கிறது.

மோடி அரசாங்கத்தின் மிகவும் முக்கியமான அம்சம் என்னவெனில்,  நாட்டிலுள்ள அனைத்து அமைப்புகளையும் பொறுக்கி எடுக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களைக் கொண்டு நிரப்பிட  வேண்டும் என்பதேயாகும். இப்போது அரசாங்கத்தில் மட்டுமல்ல,  நாட்டில் தீர்மானகரமான முடிவுகள் மேற்கொள்ளும் அனைத்து அமைப்புகளிலும்,  நடைமுறையில் அனைத்துக்கல்வி அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னணி ஊழியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் அனைத்துக் குழுக்களும்,  வாரியங்களும் தற்போது இருந்து வருகின்றன.  இப்போதைய ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தபின்னரும் கூட இந்த அமைப்புகளில் இவர்கள் நீடிக்கக்கூடிய விதத்தில் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  எனவே மோடியின் ஆட்சி முடிந்தால் கூட இந்த   அமைப்புகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய விதத்தில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இந்த அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதை எவரேனும் ஆட்சேபித்தால் அவர்  ‘தேச விரோதி  என முத்திரைகுத்தப்பட்டு, வேட்டையாடப்படுவார்.

நாடாளுமன்றமே கேலிக்குரியவிதத்தில் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறது:
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத   அளவிற்கு முதன்முறையாக இந்த ஆண்டு மக்களவையில் உறுப்பினர்கள் விவாதம் எதுவும் இன்றியே மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.   மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் மக்களுக்காக எப்படிச் செலவழிக்கப்பட வேண்டும் என்று விவாதிப்பதற்கு மக்களவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்காது,  இவ்வாறு நாடாளுமன்ற மே  கேலிக்குரிய ஒன்றாக தரம் தாழ்த்தப்பட்டுவிட்டது.  அதுமட்டுமல்ல,  இந்த ஆட்சிக்கு எதிராக பலராலும் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஏற்கப்படாமல்,  பாஜகவைச் சேர்ந்த மக்களவை சபாநாயகரால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது –   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானமும்  (impeachment motion) மாநிலங்களவைத் தலைவரான வெங்கய்யா நாயுடுவால் ஒருதலைப்பட்சமாக  டிஸ்மிஸ் செய்யப்பட்டது.  அவ்வாறு முடிவு செய்வதற்கு அவருக்கு அதிகாரமே கிடையாது.  பல சமயங்களில் பல முக்கியமான பிரச்சனைகள்   சம்பந்தமாக மோடி அரசாங்கம் சட்டங்கள் கொண்டுவருவதற்குப் பதிலாக அவசரச் சட்ட மார்க்கத்தைத் தழுவியது.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்களில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பானதும் ஒன்றாகும். எனினும் இதற்கெதிராக இடதுசாரிகள் மற்றும் சமூகத்தின் முற்போக்குப் பிரிவினரிடமிருந்து மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து,  அரசாங்கம் இதனைத் திரும்பப் பெற வேண்டியதாயிற்று. சமீபத்தில் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றுக்கிடையே மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கீடு தொடர்பாகவும், ஜவுளித் தொழில் தொடர்பாகவும்,  நிலக்கரிச் சுரங்கங்களை மீளவும் பிரகடனப்படுத்துதல் தொடர்பாகவும், பிரதமருக்கு முதன்மை செயலாளரை நியமிப்பது தொடர்பாகவும்   அவசரச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.  இவ்வாறு அவசரச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தின்   ஜனநாயக நடைமுறை.  கடுமையான முறையில் பாதிப்புக்கு உள்ளானது.  ஜனநாயக நடைமுறைகள் மூலம் செயல்படுவதற்கோ, தாங்கள் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு மக்களுக்குப் பதில் சொல்வதற்கோ பாஜகவினர் விரும்புவதில்லை.,  எனவே இத்தகைய அவசரச் சட்ட மார்க்கத்தையே அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

மாநில ஆளுநர்கள்;
பாஜக, மத்தியில் மட்டுமல்ல, மாநிலங்களிலும்கூட ஜனநாயக அமைப்புகள் மீதும், நடைமுறைகளைப் பின்பற்றுவதிலும் மிகவும் முரட்டுத்தனமாகத்தான் நடந்து கொண்டுவருகிறது. மாநிலங்களில், ஆளுநர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, காலில்போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறது. தற்போதுள்ள ஆளுநர்களில் பலர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னணி ஊழியர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே. இவர்கள் மோடி அரசாங்கத்தின் கருவியாகச் செயல்படுவதில் மோடியையும் விஞ்சக்கூடியவிதத்தில் ஆர்வமுள்ளவர்களாவார்கள்.  இதற்கு மிகச் சரியான உதாரணம், தில்லி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் குடுமிபிடி சண்டையைக் கூறலாம்.

தில்லியில் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநர்கள் (Lieutenant-Governors) அனைவருமே  தில்லி அரசாங்கம் சட்டமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக  நிறைவேற்றி அனுப்பக்கூடிய முன்மொழிவுகள் அனைத்தையும் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, ஆட்சி செய்யவிடாது, தொடர்ந்து இடையூறுகள் செய்துகொண்டே இருக்கிறார்கள்.  மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பாஜக, ஆளுநர்களை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் கர்நாடகம் ஆகியவை மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தங்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள அதிகாரத்தைக் கேலிக்கூத்தாக்கும்விதத்தில், பாஜகவிற்காக, குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு அம்மாநிலங்களில் அரசாங்கங்கள் அமைத்திட ஒருதலைப்பட்சமாக பாதை அமைத்துத்தந்திருக்கிறார்கள்.

நீதித்துறை;
பாஜக தன் செல்வாக்கிற்குள் நீதித்துறையையும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்வதைக் கைவிடவில்லை. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்திட மக்களுக்கு வேண்டுகோள்விடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்ததைப் பார்த்தோம். பின்னர் மேற்படி நான்கு நீதிபதிகளில் ஒருவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்த வலியுறுத்தி, கடிதம் எழுதியிருக்கிறார்.     நீதிபதி அந்தக் கடிதத்தில், உச்சநீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாட்டிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு எதிராகத் துல்லியமான தலையீடு (surgical intervention) அவசியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவெனில் தற்சமயம் தலைமைநீதிபதியாக இருப்பவர், எந்தெந்த வழக்குகள் எந்தெந்த நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற வேலை ஒதுக்கீட்டை (ரோஸ்டரை), பாஜக அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கக்கூடிய விதத்தில் செய்துகொண்டிருக்கிறார் என்பதாகும். மத்திய அரசாங்கமும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படையாகவே தலையிட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், உச்சநீதிமன்றத்தின் காலேஜியம் (collegium) எனப்படும் மூத்த நீதிபதிகளால் பரிந்துரைக்கப்பட்ட நீதியரசர் ஜோசப் அவர்களை மத்திய அரசு ஏற்காது தள்ளுபடி செய்திருப்பதாகும். இதுவரை இந்திய வரலாற்றில் இவ்வாறு நடந்தது கிடையாது. இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் இதுநாள் வரையிலும் கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறையையே பாஜக அரசு தூக்கி எறிந்திருக்கிறது.

அரசமைப்புச்சட்ட அமைப்புகள் மீதும் தலையீடு:
மத்திய அரசாங்கம், இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், மத்திய விஜிலன்ஸ் கமிஷன், மத்திய தலைமைத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) அலுவலகம் போன்ற அரசமைப்புச்சட்டத்தின் கீழான சுயேச்சையான அமைப்புகளின் செயல்பாடுகளின்மீதும் தலையிட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது.  நாட்டையும், நாட்டுமக்களையும் பேரழிவுக்கு இட்டுச்சென்ற ரூபாய் நோட்டுகள் செல்லாது (demonetization) என்ற 2016 நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பினைத் தயார் செய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெறுமனே 24 மணி நேரமே அளிக்கப்பட்டது என்பது எந்த அளவிற்கு மோடி அரசாங்கம் தன்னிச்சையாக நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  மோடி அரசாங்கம், இதர நிறுவனங்ளைப்போலவே இந்திய ரிசர்வ் வங்கியையும் கருதியதன் காரணமாக அதற்கு இருந்து வந்த மதிப்பும் மரியாதையுமே கேள்விக்குறியாகும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது.  புதிய நோட்டுகள் வெளிக்கொண்டுவருவதற்கான கால அவகாசம் தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு மாற்றப்படுவது இன்றும் தொடர்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கிக்குத் திரும்ப வந்த நோட்டுகளின் விவரம் குறித்து இன்றளவும் அதனால் சொல்ல முடியவில்லை.

தேர்தல் ஆணையமும் கூட   அரசாங்கத்துடன் சமரசம் செய்து கொண்டிருப்பது போலவும், அதன் கட்டளைகளுக்குத் தலைவணங்கி நடப்பதுபோலவும் தோன்றுகிறது. உதாரணமாக, குஜராத் சட்டமன்றத் தேர்தலை வேண்டுமென்றே 15 நாட்கள் தள்ளி நடத்தியது. பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவும் அப்போது மாநிலத்திற்கென்று பல்வேறு அறிவிப்புகளைச் செய்வதற்காகவுமே இவ்வாறு தாமதமாகத் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அவ்வாறு தாமதிக்காமல் மற்ற மாநிலங்களுக்கு நிர்ணயித்த தேதியிலேயே  குஜராத்திற்கும் தேதி நிர்ணயித்திருந்தால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிடுவதால், பிரதமர் மோடியால் பல திட்டங்களை அறிவித்திருக்க முடியாது. இவ்வாறு தேர்தல் ஆணையமும், மத்திய அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப செயல்படத் தொடங்கியிருப்பது போலவே தோன்றுகிறது.

கல்வி நிறுவனங்கள்:
நாட்டிலுள்ள மிக முக்கியமான பல்கலைக்கழகங்களும், எப்டிஐஐ (FTII), ஐசிஎச்ஆர் (ICHR). ஐசிஎஸ்எஸ்ஆர் (ICSSR) போன்ற நிறுவனங்களும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பலருக்கு அந்நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குவதற்குத் தேவையான கல்வித்தகுதியே கிடையாது. இவற்றின் காரணமாக இந்நிறுவனங்களின் உள்ளார்ந்த ஜனநாயக செயல்பாடுகளே அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதுடன் சங்பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலை இந்நிறுவனங்கள் கடைப்பிடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வாறு ஆர்எஸ்எஸ் நபர்களை நியமனம் செய்திருப்பதற்கு எதிராக எதிர்ப்புக் கிளர்ச்சிகளும் இந்நிறுவனங்களின் ஊழியர்களால் உக்கிரமான முறையில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  குறிப்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம், அலகாபாத் பல்கலைக் கழகம், பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் மாணவர்களும், ஆசிரியர்களும் மத்திய அரசின் தலையீடு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக வீதியிலிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

(மோடியின் நான்காண்டு கால ஆட்சி தொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு வெளியிட்டுள்ள சிறுபிரபிரசுரங்கள் ஒன்றில் உள்ள ஒரு கட்டுரை)

தமிழில்; ச. வீரமணி

Leave a Reply

You must be logged in to post a comment.