கோவை, ஜூன்.

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற வட்ட மேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறை உண்மைக்கு மாறாக, தொலைக்காட்சி நிறுவனம், செய்தியாளர் மற்றும் இயக்குநர் அமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக சங்பரிவார் மதவெறி நடவடிக்கைக்கு ஆதரவாகவே இந்த செயல் இருப்பதாக கோவை மக்கள் அரசிற்கெதிரான தங்கள் அதிருப்தியை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு சொல்லப்பட்டிருக்கும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது எனவும் விமர்சித்து வருகின்றனர்.

  1. நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால்காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளிக்காத நிலையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அடுத்து நிகழ்ச்சி குறித்து பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி கேட்டும், அதற்கான அனுமதி அளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர்.

உண்மையில் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றால்; எழுத்து பூர்வமாக காவல்துறை சார்பில்  நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை சம்பந்தப்பட்ட ஊடகத்திற்கோ, அனுமதி கேட்ட செய்தியாளர்களிடமோ அனுமதி மறுக்கப்பட்டதற்கான கடிதம் ஏன் அளிக்கப்படவில்லை. அப்படி மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்காத வரை ஏற்கப்பட்டதாகவே கருதப்படும். ஒரு வேளை அனுமதி மறுப்பு கடிதம் சமர்ப்பிக்க வேண்டிய காவல்துறையினர் அந்த பணியில் இருந்து தவறியிருந்தால் சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?. அனுமதிக்கப்படாத நிகழ்ச்சி நடக்க இருக்க இருக்கும் தகவலை ஏன் உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.

பிலக்ஸ் போர்டு வைக்க அனுமதி கேட்டும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் எப்படி நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. அப்படி வைத்த பிளக்ஸ் போர்டை ஏன் காவல்துறை நிகழ்ச்சி நடைபெறும் நாள் வரை  அகற்றவில்லை. ஆக காவல்துறையை பொய்  சொல்லி வழக்கு பதிய கூறியது யார்..?

2.அடுத்தாக கலையரங்கின் மேலாளரிடம் அரங்கத்தை பதிவு செய்த போது, வட்டமேசை விவாத நிகழ்ச்சியை மாணவர்களை வைத்து நடத்துவதாக தெரிவித்து விட்டு, விவாதத்தில் எதிர்மறை கருத்துகளை கொண்ட பிரமுகர்களை அழைத்து விவாதம் நடத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசப்பட்டால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் , சிலரை பேச அனுமதித்தாக புகார் கொடுக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அரங்கின் முன்பு துவங்கி நகரின் பல பகுதிகளில் யார் விவாதிக்க போகிறார்கள் என்ற விளம்பரம் வைக்கப்பட்டிருந்து. மேலும் அந்த தொலைக்காட்சியிலும் தொடர்ந்து யார் விவாதிக்கிறார்கள் என்ற விளம்பரத்தையும் வெளியிட்டது.  தன் அலுவலக வாயிலின் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ்சை பார்க்காமல் எப்படி இருந்திருக்க முடியும்..?

அதேபோல்  இதே அரங்கில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது பிப்ரவரி 18 அன்று நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் இதே போன்ற விவாத நிகழ்ச்சி மக்கள் சபை என்ற பெயரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இதே போன்ற எதிரும் புதிருமான கருத்துகளை கொண்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போதும் இதே போன்ற கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்றது. இப்படி இருக்கையில் எதிரும் புதிருமான கருத்துகளை உடையவர்களை பங்கேற்க வைத்தனர் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும். விவாதம் என்றாலே எதிரும் புதிருமான கருத்துகளைத்தானே பகுத்து ஆய்வு செய்ய முடியும். ஆக யாருடைய அழுத்தத்தில் பேரில் அரங்க மேலாளர் புகார் செய்தார் ?

  1. காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் அமீர் ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தாகவும் அந்த வீடியோ காவல்துறை வசம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவாதத்தில் பங்கேற்ற தமிழிசை, செம்மலை, ஞானதேசிகன் ஆகியோர் தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்தனர். அதனால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது என நியாயப்படுத்தி பேசினர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாகவே இயக்குநர் அமீர், தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் கலவரத்தை தூண்டினார்கள் என்றால், கோவையில் இந்துமுன்னணி பிரமுகர் சசிக்குமார் கொல்லப்பட்ட போது, கடைகள் சூறையாடப்பட்டது. போலீஸ் வாகனம் தீ  வைத்து எரிக்கப்பட்டது. அங்கு இருந்தவர்கள் யார் ? அவர்கள் சமூகவிரோதிகள் இல்லையா? அங்கு கூட காவல்துறை துப்பாக்கி சூடு   நடத்தவில்லையே என்றுதான் கூறினார். அதற்கு கூட ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த கும்பல் விடவில்லை. அந்த வீடியோவையும் சேர்ந்து காவல்துறை வெளியிட வேண்டும். அதற்கு காவல்துறைக்கு தைரியம் வேண்டும். இருக்கும் என்று நம்புவோம்..

  1. சட்டமன்றத்தில் முதல்வர் இந்த சம்பவம் குறித்து அளித்துள்ள விளக்கத்தில், விவாதத்தில் தனியரசு பாபர் மசூதி இடிப்பு மற்றும் விவாத தலைப்பிற்கு சம்பந்தமில்லாத சங்கதிகளை குறிப்பிட்டுள்ளார். விவாத மேடையில் தூத்துக்குடி நிகழ்வுகளை பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவாதம் தூத்துக்குடியின் சட்ட ஒழுங்கை பாதிக்க கூடும். உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இது போன்ற விவாதங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அரிய ஆலோசனைகளை ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாரி வழங்கியுள்ளார்.

முதல்வர் பழனிச்சாமி, பாபர் மசூதி இடிப்பு விவாதத்திற்கு தொடர்பில்லாத சங்கதி என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. விவாதத்தில் தமிழிசை தூத்துக்குடியில் போராடிய மக்களை தடையை மீறி சென்றனர் என்று குற்றஞ்சாட்டும் போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக  பாபர் மசூதியை இடிக்கும் போது கூட பாஜகவினர் தடையை மீறித்தான் ஊர்வலமாக  சென்று இடித்து தள்ளினர். அவர்கள்தான் சமூக விரோதிகள், தூத்துக்குடி மக்கள் எதையும் இடிக்கவில்லை என்றுதானே பேசினார்.  இனிமேல் முதல்வர் எந்த தலைப்பிற்கு எது எது தொடர்புடைய விஷயங்களை பேசலாம் என பட்டியலிட்டு உத்தரவு போட்டால் ஒரு வேளை விவாதிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

தூத்துக்குடி நிகழ்வுகளை பற்றி அதிகமாக பேசியது, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, தமாகா ஞானதேசிகன் ஆகியோர்தான் என்பதையும் முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும் அது குறித்த விவாதங்களை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மக்களும் கூட பெரும்பான்மையே இல்லாத ஆட்சி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது ஆட்சியில் பாஜகவின் பினாமி ஆட்சியில் தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அந்த தகவலை கூட உளவுத்துறை மூலம் கேட்டு வாங்கி படித்து தெரிந்து கொள்வது நல்லது. அல்லது வழக்கம் போல் மீடியாவை பார்த்துத்தான் தெரிந்து கொள்வேன் என்று அடம் பிடித்தால் இதன் மூலமாவது தெரிந்து கொள்ளுங்கள் முதல்வர் அவர்களே…

வழக்கு பதிவின் பின்னணி என்ன?

விவாதத்தின் போது பாஜகவினரை தவிர பார்வையாளர்கள் அனைவரும் தொடரும் போராட்டங்கள் மக்கள் பிரச்சனைகளுக்காகத்தான் அரசியலுக்காக அல்ல என்பதை தங்களின் அமோக ஆதரவு மூலம் வெளிப்படுத்தினர். மேலும் பாஜக மற்றும் அதிமுகவின் பூசி முழுகி நழுவும் செயலுக்கு கரகோஷத்தின் மூலம் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். போதாக்குறைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளார் கே.பாலகிருஷ்ணன் பாஜக மற்றும் அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கிழித்து தொங்கவிடும் வகையில் பேசியது, பார்வையாளர்கள் மத்தியல் அமோக ஆதரவை பெற்றது. இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றால், ஏற்கனவே தமிழக மக்களிடம் பாஜக மற்றும் அதிமுகவிற்கு எதிராக இருக்கும் அதிருப்தி மேலும் அதிகரித்து விடும் என்ற நிலை உருவானது. 2019ல் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள்  நடந்தால் தாமரையும் இலையும் துடைத்தெறியப்படும் என்ற பயம் உருவானது.

இந்நிலையிலேயே எப்படியாவது நிகழ்ச்சியை நிறுத்தி விட வேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் அமீரை முன்வைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருப்பது போல், ஒரு குறிப்பிட்ட கட்சியினர் அமீருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் கோஷமிட்டனர். ( பாவம் அந்த கட்சியின் பெயரை கூட முதல்வரால் வெளிப்படையாக கூற முடியவில்லை ) அக்கட்சியின் மாநிலத்தலைவர் (தமிழிசை ) சமாதானம் செய்து கூச்சலும் குழப்பத்திலும் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார். ஏன் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. அமீரை  ஒருமையில் மட்டுமல்ல மிகவும் தரக்குறைவாக பேசினார்களே ஏன் அவர்களை கைது செய்யவில்லை. அதுகூட வேண்டாம், குறைந்த பட்சம் அப்படி பேசியவர்களை ஏன் அரங்கில் இருந்த காவலர்கள் வெளியேற்றவில்லை.

காரணம், இது போன்ற கருத்து ரீதியான விவாதங்கள் நடந்தால் பாஜக மற்றும் அதிமுக மக்களிடம் மேலும் மேலும் அம்பலமாகும் என்ற பயம்தான் முதல் காரணம். அடுத்து மறைமுகமாக இனி யாரும் பாஜகவிற்கு எதிரான  விமர்சனங்களை கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்ற எச்சரிக்கையும் உள்ளடங்கியிருக்கிறது. நாங்கள் எந்த கருத்தை நினைக்கிறோமோ அதற்கு ஆதரவாகத்தான் நீங்கள் நிகழ்ச்சி நடத்த வேண்டும். அப்படியென்றால் அனுமதிப்போம், இல்லாவிட்டால் வழக்கு போடுவோம். ஊடகத்திற்கு இடையூறு செய்வோம் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.   அதிமுகவை கடுமையாக ஊடகங்கள் விமர்சித்த போதும் அமைதியாக இருந்த தமிழக அரசு, பாஜகவை விமர்சிக்கும் போது பொறுத்துக்கொள்ள முடியாமல் பொங்கி எழும் ராஜவிசுவாசம்தான் புல்லரிக்க வைக்கிறது.

இதே கோவையில் கள்ள நோட்டு அச்சிட்ட கும்பலில் உள்ள ஒரு நபர் முதல்வரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் அதை ஏன் வெளியிட்டீர்கள் என்பதுதான், அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் என்றோ, அப்படி முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்காகவோ இல்லை. அப்படியென்றால் இனி எல்லோரும் வெளியிடும் செய்திகளை முதல்வரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் போலும்.

தற்போது நசுக்கப்படுவது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துசுதந்திரத்தை கழுத்தை நெறிக்கும் செயல் ஆகும்.

இதுகுறித்து கோவை காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய போது, எங்களுக்கே தெரியும்.. இது அநியாயம் என்று.. ஆனால் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள்.. வழக்கு பதிவு செய்ய சொல்லி இரு கட்சிகளில் இருந்து மிக மிக முக்கிய புள்ளிகள் கடும் அழுத்தம் கொடுத்தனர். அதுமட்டுமல்ல, அதனையும் உடனே பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுக்க வேண்டும் என்றனர். அப்பவே எங்களுக்குள் பேசிக்கொண்டோம் இது வேண்டாத வேலை சொன்னால் கேட்கமாட்டார்கள்.. அனுபவிக்கட்டும் என விட்டு விட்டோம்.. அதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர் என்றார்.. அதே போல் அரங்கத்தின் உரிமையாளர்கள் தரப்பில் இப்படி புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்  சிறிதும் இல்லை. அவர்களும் கடும் நிர்பந்தத்தின் பெயரில் மட்டுமல்ல, எப்படி புகார் கொடுக்க வேண்டும். அதில் என்ன வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பது கூட டிக்டேட் செய்தே அனுப்பியிருக்கின்றனர். சரிங்க பிரதர்… தயவு செய்து பெயரை போட்டு எங்களை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்… என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்..

-எம்.கண்ணன்

Leave a Reply

You must be logged in to post a comment.