திருப்பூர்,
தமிழகத்தில் சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்குத் தாரை வார்க்கும் கொள்கையைக் கைவிடவும், சாலைப் பணியாளர்களின் ஊதியம், வாரிசுகளுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கத்தினர் சங்கு ஊதி கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், பழனி ஆகிய கோட்டங்களில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை பராமரிக்க, தமிழக அரசு தனியார் கம்பெனியான எஸ்.பி.கே. நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது, இத்துடன் அனைத்து கோட்டங்களிலும் சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்தும், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன் வழங்கவும், ஏழாவது ஊதியக்குழு, ஒரு நபர் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கவும், கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்கவும், பணிநீக்க காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவும், வாக்குறுதி அளித்தபடி அரசாணை பிறப்பிக்கவும் வலியுறுத்தி, சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை நாளில் கோட்டப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி சங்கு ஊதும் போராட்டம் நடத்துவது என சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்திருந்தது.

அதன்படி திருப்பூர் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சாலைப் பணியாளர் சங்க கோட்டத் தலைவர் என்.சிவகுமாரன் தலைமை வகித்தார். கோட்டத் துணைத் தலைவர் பி.அம்மாசை வரவேற்றார். கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். முன்னதாக சங்கு ஊதி கோரிக்கையை முழக்கங்களாக எழுப்பினர். இதில் சாலைப் பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக கோட்டப் பொருளாளர் ஆர்.கருப்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.