சேலம்,
சேலம் – சென்னை பசுமை வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சேலம்- தர்மபுரி- கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு புதியதாக அமைக்கப்பட உள்ளதாக அரசுஅறிவித்துள்ள பசுமை வழிச்சாலையால் விவசாயத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே, சேலம் சென்னை பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும். இதேபோல், விசாரணை என்ற பெயரில்காவல்துறையினர் விவசாயிகளின் வீடுகளுக்கு இரவு நேரத்தில் சென்று வருவதை தடுத்திட வேண்டும். விவசாயிகள் உள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டும்.

மேலும், காவல்துறையினரால் முத்துக்குமார், மாரிமுத்து ஆகிய இருவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் வேண்டும். ஜூன் 14 ஆம் தேதியன்று நடைபெறும் விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகளும் அச்சமின்றி கலந்துகொள்ள உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆகியோரை இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவினை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் மோகன சுந்தரம் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தைவேல், எம்.சேதுமாதவன், எம்.குணசேகரன், சிபிஐவிமலன் உள்ளிட்ட தலைவர்கள் அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.