கடலூர்:
தீவிரவாதி என்ற முத்திரை குத்தினாலும் மக்களுக்கான போராட்டத்தை தொடர்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
அரசுப்பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதோடு, அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.சிறுபான்மை மக்களை காத்திட வேண்டும், பெட்ரோலிய பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடுவோம் தமிழகமே என்றத் முழக்கத்தை முன்னெடுத்து பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறது. கடலூர் முதுநகரில் திங்கள்கிழமை துவங்கிய பிரசார பயணத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது :
போராட்டம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசினாலும், போராடுபவர்களைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தாலும் அதைப் பெருமையோடு ஏற்றுக்கொண்டு மக்களுக்கான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம். தேர்தலுக்கு அப்பால் சமூக நியாயங்களுக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பிரச்சாரத்தை நடத்திவருகிறோம்.

இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் கோயிலுக்குச் சென்றாலும் சாதி ஆதிக்கம் தொடர்கிறது. குறிப்பிட்ட சாதிக்காரர்கள் மட்டும்தான் கோயிலுக்குள் செல்ல முடியும் என்ற சமூக அவலத்தை இன்னும் எத்தனைக் காலத்திற்கு சகித்துக்கொண்டு இருக்கப் போகிறோம்? தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் என்று தனது துறையின் மானியக்கோரிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் இந்தியாவில் நேரடி வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக முதல்வர் கூறியிருப்பதன் மூலமாக யார் கட்டுப்பாட்டில் ஆட்சி நடைபெறுகிறது என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்குக் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியவர்கள் சமூக விரோதிகளா அல்லது அதனை எதிர்த்துப் போராடுபவர்கள் சமூக விரோதிகளா ?

பத்திரிக்கையாளர்களைக் கேவலமாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்ய திராணியற்ற இந்த அரசு, தொலைக்காட்சிகள் மீதும், இயக்குநர் அமீர் மீதும் வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளது. இந்த அரசை சம்மன் அனுப்பாமலே வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொலைக்காட்சியின் நேரடி விவாதத்தில் காவல் துறையின் கண்முன்னே கலவரத்தில் ஈடுபட்டு பிரச்சனை செய்த பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அமைதியாக இருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. கண்ணிருந்தும் பார்வையில்லாதவர்களாகக் காவல்துறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.