சென்னை,

கீழடி ஆய்வு குறித்தும், தமிழர்களின் தொன்மை நாகரீக வரலாறு குறித்தும் பேச அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இம்மாதம் 29 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் முதல் தேதி வரை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்க தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்த அழைப்பை ஏற்று ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். ஒரு மாதம் காலம் கடத்தி ‘உரிய அதிகார அமைப்பு இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை’ என்று காரணம் கூறி மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மதுரை அருகே உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டபோது வைகை நதி நாகரீகத்தின் அடையாளங்களைக் கண்டறிந்தார். இவை வரலாற்றுப் பெட்டகங்களாக மதிக்கப்படுகின்றன. இவற்றைக் கண்ணில் காட்டாமல் மூடி மறைத்துவிட மத்தியில் உள்ள மோடி அரசு முயற்சி செய்தது. உரிய நேரத்தில் தமுஎகச உள்ளிட்ட அமைப்புகள் தலையிட்டு அந்த முயற்சியை முறியடித்தனர்.

கீழடிஆய்வு வெளிச்சத்திற்கு வந்து அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது. தமிழகமே பெருமிதம் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கோரியது. தொடர்ந்து இந்த ஆய்வு பணியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மோடி அரசு அசாமுக்கு மாற்றியது. அங்கேயும் அவருக்கு அகழாய்வுப்பணி ஒதுக்காமல் கண்டெடுக்கப்பட்ட சின்னங்களைப் பராமரிக்கும் பணியை கொடுத்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தது.

இப்போது தமது ஆய்வுகள் பற்றி உரையாற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த செயல் அந்த அமைப்புகளை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிப்பதாகும்; இழிவுபடுத்துவதாகும். கீழடி ஆய்வு குறித்தும் தமிழர்களின் தொன்மை நாகரீக வரலாறு குறித்தும் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிவிடக்கூடாது என்ற மத்திய அரசின் வன்மம் இந்த அனுமதி மறுப்பில் வெளிப்படையாகத் தெரிகிறது. மத்திய அரசின் இச்செயலை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இம்மாதம் 29ந் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்வில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்க மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.