சேலம்,
சேலத்தில் காணாமல்போன நூலகத்தையும், தொலைந்துபோன தார்சாலையையும் கண்டுபிடித்து தரக்கோரி பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் புகார் மனு அளித்தனர். சேலம் மாநகர் 49 ஆவது கோட்டம் அன்னதானப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வந்த நூலகம் தற்போது பாழடைந்த கட்டிடமாக காட்சியளிக்கிறது. மேலும், அதே பகுதியில் உள்ள பழனியப்பா காலனி, ராமசாமி தெரு, முனிசாமி தெரு, அகத்தியர் தெரு, கண்ணகி தெரு, மாரியம்மன் கோவில் மெயின்ரோடு போன்ற பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் முன்பு இருந்த தார்சாலை பழுதடைந்து, மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறத. இதனால் இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரியநடவடிக்கை எடுத்திட வலியுறுத்தும் வகையில் அப்பகுதி மக்களிடம் இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதைத்தொடர்ந்து திங்களன்று வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் காணாமல்போன நூலகத்தையும், தொலைந்துபோன தார்சாலையையும் கண்டுபிடித்து தரக்கோரும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வந்து சேலம் மாவட்ட துணை ஆட்சியர் (பொது) விஜயபாபு மற்றும் மாநகராட்சி ஆணையர் சதிஷ் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி உள்ளிட்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: