சிங்கப்பூர்:
வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஜூன் 12 செவ்வாயன்று சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்துள்ளனர். ஒட்டுமொத்த உலகின் கண்களும் சிங்கப்பூரை நோக்கி குவிந்துள்ளன.

கிம் – டிரம்ப் இடையே நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அது கொரிய தீபகற்பத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் வித்திடும் என மக்கள் சீனம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையான முன் முயற்சிகளை மேற்கொண்ட மக்கள் சீன அரசு, பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்துள்ளது.அணு ஆயுத பரவல் தடைக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இந்தப் பேச்சுவார்த்தை அமையும் என்றும், இப் பேச்சுவார்த்தையை எந்தவிதத்திலும் பின்னடைய செய்துவிடாமல் நடத்தியே தீர வேண்டும் என்பதில் மிகவும் ஒத்துழைப்பான, சாதகமான முன்மொழிவுகளை தந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு மக்கள் சீனம் பாராட்டும் தெரிவித்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் நிலவுகிற ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் அரசியல் ரீதியாக தீர்வினை ஏற்படுத்த, அந்த தீர்வு ஒரு சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லப்பட சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நிச்சயம் உதவும் என்று நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சுன் யிங், பெய்ஜிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அணு ஆயுதங்களின் பிடியிலிருந்து கொரிய தீபகற்பத்தை விடுவித்து அமைதியை நிலைநாட்ட ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக இது அமைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கிம் – டிரம்ப் வருகையையொட்டி சிங்கப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கிலிருந்து சிங்கப்பூர் 4700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பியாங்யாங்கிலிருந்து ஞாயிறன்று காலை புறப்பட்ட வடகொரிய ஜனாதிபதி கிம், முற்பகலில் சிங்கப்பூர் வந்தடைந்தார். முதலில் அவர் வடகொரியாவின் ஏர் கொரியா விமானத்தில் வருவதாக இருந்தது. எனினும் திடீரென விமானம் மாற்றப்பட்டது. ஏர் சைனா விமானத்தில் அவர் புறப்பட்டார். பியாங்யாங்கிலிருந்து பெய்ஜிங் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரும், உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள பத்திரிகையாளர்களும் குவிந்துள்ளனர்.முன்னதாக கிம்மை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து ஞாயிறன்று இரவு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசியன் லூங், கிம்மை நேரில் சந்தித்து பேசினார். இரு தலைவர்களும், வடகொரியா – சிங்கப்பூர் இடையிலான உறவுகள், வர்த்தக முன்னேற்றம், கொரிய தீபகற்பத்தில் நிலவும் சமீபத்திய வளர்ச்சிப் போக்குகள் ஆகியவை பற்றி விவாதித்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகொரியா – அமெரிக்கா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முன்வந்த சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்ட கிம், “ஒட்டுமொத்த உலகமும் எங்களது பேச்சுவார்த்தையில் கவனத்தை குவித்துள்ளது… இதற்காக முனைப்புடன் முயற்சிக்கவும், ஒப்புக் கொள்ளவும் செய்த சிங்கப்பூர் அரசுக்கு இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தையை உண்மையில் அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்” என்று கூறினார்.
சிங்கப்பூரின் செந்தோஸா தீவில் அமைந்துள்ள காப்பெல்லா ஹோட்டலில் கிம் – டிரம்ப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கான ஒட்டுமொத்த செலவையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஞாயிறன்று இரவு சிங்கப்பூர் வந்தடைந்தார். இங்குள்ள பாயா லெபார் தீவில் அமைந்திருக்கும் அமெரிக்க ராணுவத் தளத்தில் சிறப்பு ராணுவ விமானத்தில் வந்திறங்கிய அவரை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.