புதுதில்லி,
வாக்களித்த விவரம் அறிவிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து பழுதடைவது மிகவும் தீவிரமான பிரச்சனை என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான காலநிலையிலும் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற பிறகே விவிபேடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாடுமுழுவதும் பயன்படுத்தத் தொடங்கியதாகவும், ஆனால் இப்போது வாக்குப்பதிவின் போது இயந்திரங்கள் தொடர்ந்து பழுதடைந்து வருவது ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என குரேஷி கூறினார். குரேஷி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது 2011 ஆம் ஆண்டு வாக்களித்த விவரம் அறியும் விவிபேடு இயந்திரம் பரிசோதனை நடத்தப்பட்டது. 2013 செப்டம்பரில் நாகாலாந்து மாநில வாக்குப்பதிவில் விவிபேடு இயந்திரங்கள் முதன்முறையாக பயன் படுத்தப்பட்டன. அப்போதும் அவர்தான் தலைமைத் தேர்தல் ஆணையர்.

ஈரப்பதம் மிக்க கேரள காலநிலைக்கும், வறண்ட, சூடுமிக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மிரிலும், லடாக்கின் உயர்ந்த பிரதேசங்களிலுள்ள கடுமையான குளிரிலும்,தொடர்ந்து மழை பெய்யும்சிரபுஞ்சியிலும் விவிபேடு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன. முதற்கட்ட பரிசோதனையில் சில இயந்திரங்கள் முடங்கியதால் அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப் பட்டன. அதன்பிறகே விவிபேடு இயந்திரங்கள் நாட்டில் நடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அனைத்துப் பரிசோதனைகளும் வெற்றிகரமாக நடந்தபிறகும் நாட்டில் அடுத்து நடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முடங்கி வருவது தீவிரமாக கவனிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசம் கெய்ர்னா இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முடங்கியதற்கு வெப்பம் மற்றும் அதிகமான வெளிச்சத்தை காரணமாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஏதாவது வாக்குப்பதிவு மையத்தில் விவிபேடு ரசீதுகள் மட்டும் எண்ணப்படும் முறை சரியல்ல. நிலையாக குறிப்பிட்ட சதவீதம் ரசீது களையாவது எண்ணி உறுதிப் படுத்த தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும் என குரேஷி சுட்டிக் காட்டினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.