உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது பழமொழி. விவசாயிகளுக்கு எல்லாப் பக்கமும் இடியாக இருக்கிறது. இயற்கை பொய்ப்பதாலும் ஆட்சியாளர்கள் பொயத்ததாலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் ஏறத்தாழ கையறு நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களை கைதூக்கி விடுவதற்கு ஒன்றும் செய்யாத மத்திய, மாநில அரசுகள் வாமன அவதாரம் எடுத்து விவசாயிகள் எனும் மாவலிகள் தலையில் கால் வைத்து அமுக்குகின்றன.

சென்னை- சேலம் இடையே எட்டு வழி அதி விரைவு பசுமைச் சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகாய வழிஎன்றால் அரசாங்கங்கள் யாரிடமும் கேட்கவேண்டியதில்லை. நில வழி எனும் போது நிலத்தின் சொந்தக்காரர்களான விவசாயிகளிடம் அனுமதி கேட்டு ஒப்புதல் பெற வேண்டாமா? அவர்களது ஒப்புதல் இல்லாமலேயே நிலத்தில் இறங்கி அளக்கும் வேலையையும் கோவிலை இடிக்கும் காரியத்தையும் அரசு எந்திரம் செய்யத்துவங்கினால் எதிர்க்க மாட்டார்களா? அப்படி எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்களை நள்ளிரவிலும் அதிகாலையிலும் வீடு புகுந்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று அராஜகத்தில் ஈடுபடலாமா? அவர்கள் என்ன தவறு செய்தனர்? இந்த சென்னை-சேலம் பசுமைச் சாலைத் திட்டத்தால் ஐந்து மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படவுள்ளது. 10 ஆயிரம் கிணறுகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழிக்கப்படும். இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள் இடிக்கப்படவுள்ளன. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள எட்டு மலைகள் உடைக்கப்படும். இதனால் 30 ஆயிரம் விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும் நிலை உள்ளது.

இத்தகைய சூழலில் விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தி அவர்களின் ஒப்புதல் பெற்று நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளாமல் காவல்துறையை ஏவி மிரட்டி அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது. தங்களது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக போராடும் விவசாயிகளையும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்புகளை சார்ந்தவர்களையும் அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைப்பதும் பொய் வழக்குப் போடுவதும் கடும் கண்டனத்துக்குரியதாகும். ஏற்கெனவே கெயில் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் அமைப்பது என்று விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறி நீதிமன்றம் சென்றார். ஆனால் அவரது வழியில் செயல்படுவதாகக்கூறிக் கொள்ளும் தமிழக அரசு விவசாயிகளை படுகுழியில் தள்ளிவிடவே அடக்குமுறை அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இது நிலம் கையகப்படுத்துதல் சட்டம்-2013க்கு எதிரானது. இதனை கைவிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அமைதியை ஏற்படுத்திட வேண்டும். இல்லை எனில் அரசே விவசாயிகளை போராடத் தூண்டுவது போலாகிவிடும்.

Leave A Reply

%d bloggers like this: