உடுமலை,
எஸ்.சி – எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை செல்லாமல் ஆக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடுமலை நகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடுமலை நகர மாநாடு வெள்ளியன்று(8ம் ந் தேதி) பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் மத்திய அரசு எஸ்.சி – எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அட்டவணை ஒன்பதில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தலித் மாணவ – மாணவியர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதி திராவிட நலத்துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன் படுத்த வேண்டும். நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உடுமலை நகராட்சியில் கடந்த 1994ம் ஆண்டு அம்பேத்கர் சிலையும், 2007ம் ஆண்டு தந்தை பெரியார் சிலையும் அமைக்கப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, சிலைகள் அமைப்பதற்கு உடனடியாக நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.மாநாட்டிற்கு உடுமலை தாலுகா தலைவர் பஞ்சலிங்கம் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆர். குமார் மாநாட்டை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனண் உரையாற்றினர். முன்னதாக, இம்மாநாட்டில் உடுமலை புதிய நகரத் தலைவராக நாகப்பன், செயலாளராக செல்லதுரை, பொருளாளராக பாலகிருஷ்ணன் மற்றும் துணை தலைவர்களாக வெள்ளிமலை, நடராஜன், கருணாநிதி, துணை செயலாளராக தண்டபாணி, ஸ்ரீரங்கன், வசந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. சுப்பிரமணியம், அம்பேத்கர் கல்வி மைய ஒருக்கிணைப்பாளர் நடராஜ், மாற்று திறனாளிகள் சங்கத்தின் தலைவர் மாலினி, சிஐடியு மோட்டார் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சுதா சுப்பிரமணியன், மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வசந்தி, ஆதிதமிழர் பேரவையின் நிர்வாகிகள் பெரியார் தாசன், வெள்ளிமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.