ஈரோடு,
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் குவின்டாலுக்கு ரூ.2 ஆயிரத்தி 100 வரை திடீர் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, பெருந்துறையிலுள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை மையம் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த மே 7 ஆம் தேதி ஒரு குவின்டால் விரலி மஞ்சள் அதிகபட்ச விலையாக ரூ.9100க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 300 க்கும் விலை போனது. கடந்த ஒரு மாதமாக ஓரளவு மட்டுமே குறைந்து அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 700 முதல் 9 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மஞ்சள் விதைப்பு தீவிரமடைந்துள்ளதாகவும், விதைப்பு நிலவரத்தை பொறுத்து மஞ்சளை இருப்பு வைக்க வியாபாரிகள் திட்டமிட்டுள்ளதால் திடீரென மஞ்சள் விலை குறைந்தது. வெள்ளியன்று பெருந்துறை அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் விரலி ரகம் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 679 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 076 ஆகவும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 099க்கும், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 899க்கும் விலை போனது.

ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகபட்சமாக விரலி ரூ.8 ஆயிரத்து 309க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 829க்கும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 277க்கும், குறைந்தபட்மாக ரூ.5 ஆயிரத்து 239 ஆகவும் விலை போனது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ஒரு குவின்டால் மஞ்சள் ரூ.2 ஆயிரத்து 100 வரை விலை சரிந்தது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மஞ்சள் கிடங்கு உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சியால் விதைப்பு குறைந்து விட்டது. இந்த ஆண்டில், பருவமழை சீசனுக்கு முன்பே பரவலாக பெய்வதால், தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் மஞ்சள் விதைப்பு அதிகரித்துள்ளது. சாகுபடி பரப்பு, அடுத்த ஆண்டு மஞ்சள் வரத்து எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிட்டு தான் மஞ்சள் வியாபாரிகள் மஞ்சளை இருப்பு வைப்பார்கள். தற்போதைய நிலையில் வியாபாரிகள் இருப்பு வைக்க தயங்குவதால் விலை சரிந்து வருகிறது என்று கூறினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.