சிவகாசி,
சமூக விரோதிகளாக பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மட்டுமே உள்ளனர் என திருத்தங்கல்லில் செய்தியாளர் சந்திப்பில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிவகாசி அருகே திருத்தங்கத் லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் அ.விஜயமுருகன் இல்லத் திருமண விழாவில் ஞாயிறன்று கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது: இந்த ஆண்டும் காவிரியிலிருந்து குறுவைச் சாகுபடிக்கான தண்ணீர் கிடைக்கவில்லை. தொடர்ந்து 7-ஆவது ஆண்டாக காவிரி தண்ணீர்கிடைக்காதது தமிழக அரசின் கையாலாகதனத்தை காட்டுவதாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டமே அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் பொன். ராதாகிருஷ்ணன் சார்ந்துள்ள பாரதியஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தான் பயங்கரவாத சக்திகளாகவும் சமூக விரோதிகளாகவும் உள்ளன. வேறு யாரும் எங்களுக்குத் தெரிந்து சமூக விரோதிகள் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் நடைபெறும் பல வன்முறைச் சம்பவங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர்தான் காரணமாக உள்ளனர் என பதிலளித்தார். நீட் தேர்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்கொலை என்ற தவறான பாதையைத் தேர்வு செய்யக் கூடாது. நீட் தேர்வால் தமிழகம் முழுவதுமுள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போகிறது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரி தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நீட் தேர்வை தமிழகத்திலிருந்து ஓரங்கட்டவும், ஒழித்துக்கட்டவும் முடியும் என்றார். (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: