சென்னை,
கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் பசுமைச்சாலை திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் நிலத்தை பாதுகாப்பதற்காக போராடும் மக்கள் மற்றும் அமைப்பினரை காவல்துறையை ஏவி அச்சுறுத்தும் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் முதல் சென்னை வரை அதிவிரைவு பசுமைச்சாலை அமைக்க மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலங்களில் பெரும்பாலானவை நல்ல நஞ்சை நிலங்கள் மற்றும் வனங்கள் நிறைந்த பகுதியாகும். பல கிராமங்களை முற்றிலும் காலிசெய்ய வேண்டியுள்ளது. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, நிலத்தை இழக்கும் விவசாயிகள் இத்திட்டத் திற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்து
வதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டை பட்டியில், வருவாய் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அளக்கவும், கோயிலை இடிக்கவும் முற்பட்டதை மக்கள் ஆட்சேபித்தனர்.

ஆட்சேபணையை தெரிவித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டசிலரையும் நள்ளிரவில் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையினரின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடும் எதிர்ப்பிற்கு பிறகு காவல்நிலையத்திலிருந்து பிற்பகல் விடுவித்துள்ளனர். தங்களின் ஒரே வாழ்வாதாரமான நிலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் மக்களை, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளை சார்ந்தவர்களை காவல்துறையை ஏவி அச்சுறுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

காவல்துறையின் அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை ஒடுக்குவது என்று செயல்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கிறது. அடாவடித்தனமாக விவசாயிகளின் நிலங்களில் இறங்குவது நிலம்கையகப்படுத்துதல் சட்டம் 2013-க்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் பசுமைச்சாலை திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் வலியுறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.