திருப்பூர்,
தமிழக மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு இடதுசாரிகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து,  “போராடுவோம் தமிழகமே!” என்ற அறைகூவலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள பிரச்சார பயணக் குழுவுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகருக்கு சனியன்று இரவு பிரச்சார பயணக்குழுவினர் வந்து சேர்ந்தனர். அவிநாசி மேற்கு ரத வீதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பிரச்சார பயணக்குழுவில் பங்கேற்ற மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, பயணக்குழுத் தலைவர் ஏ.லாசர் ஆகியோர் இன்றைய அரசியல் சூழல், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நிலைபாடுகளை அம்பலப்படுத்தி உரையாற்றினர். இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், பிரச்சார பயணக்குழுவில் பங்கேற்ற மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், பயணஒருங்கிணைப்பாளர் கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, ஏ.ராதிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்
கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக பிரச்சார பயணக்குழுவுடன் வருகைதந்த கலைக்குழுவினர் பாடல்கள் இசைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.பழனிசாமி ஆகியோர் உரையாற்றினர். பிரச்சார கூட்டத்தின் நிறைவாக ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார். ஞாயிறன்று காலை பிரச்சாரக் குழுவினருக்கு 15 வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் அனுப்பர்
பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிர்வேட்டுகள் வெடித்து, உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இங்கு நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, பிரச்சார குழுத் தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் ஆகியோர் உரையாற்றினர். இதைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் அங்கேரிபாளையம் வி.பி.சிந்தன் நினைவகம் முன்பாக பிரச்சார பயணக்குழுவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்தது கூட்டம் நடைபெற்ற மாகாளியம்மன் கோயில் திடலுக்கு கட்சி அணியினர் செங்கொடிகளுடன் ஊர்வலமாக தலைவர்களை அழைத்து வந்தனர்.

இங்கு கலைக்குழுவின் சார்பில் போராடுவோம் தமிழகமே என்ற கருப்பொருளில் நாடகமும், பறை இசை, பாடல் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் உரையாற்றினர். வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமியும், சிஐடியு வடமாநிலத் தொழிலாளர்கள் சார்பில் கமிட்டி உறுப்பினர் சந்தோஷூம் பயணக்குழுவினருக்கு நிதியுதவி செய்தனர். இதையடுத்து திருப்பூர் வடக்கு மாநகருக்கு உட்பட்ட குமரானந்தபுரத்தில் ஊர் மக்கள் புடை சூழ பயணக்குழு தலைவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதிர்வேட்டு முழங்க குமரானந்தபுரம் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன்பாக பிரச்சாரக் கூட்டம் தொடங்கியது.

இங்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டத்துக்கு வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் தலைமை ஏற்றார்.திருப்பூர் மாநகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களைத் தொடர்ந்து பயணக்குழுவினர் காங்கேயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். பயணக்குழு சென்ற வழி நெடுகிலும் செங்கொடிகள், பதாகைகள் கட்டப்பட்டு நகரெங்கும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணக்குழு தலைவர்களுடன் மாவட்ட செயற்குழு, நகர, ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி அணியினர் செஞ்சட்டை சீருடையுடன் பங்கேற்றனர். அனைத்து இடங்களிலும் பிரச்சார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

Leave A Reply

%d bloggers like this: