திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு தினங்களில் காற்றுடன் பெய்துவரும் மழை பெருத்த சேதங்களை ஏற்டுத்தியுள்ளது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளில் சிறுமி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

காற்றில் மரம் முறிந்தும், பிளக்ஸ் போர்டுகள் விழுந்தும் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இடுக்கியில் மரம் விழுந்தும், மண்சரிந்தும் 50 வீடுகளும் ஏராளமான வாகனங்களும் நாசமாகின. பல்வேறு இடங்களில் மரம் விழுந்து ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை புதன் கிழமை காலை வரை தொடரும் என வானிலை அறிவிப்பு மையம் முன்னறிவிப்பு செய்துள் ளது. கனமழையில் தென்னை மரங்கள் சாய்ந்து திருவனந்தபுரத்திலும், கோழிக்கோட்டிலும் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். நெய்யாற்றின்கரை பெருங்கடவிளை ஆங்கோட்டில் உள்ள ஸ்ரீதீபம் வீட்டில் தீபா (44) வீட்டருகில் தாழ்வாரத்தில் இருந்தபோது சாய்ந்து விழுந்த தென்னை மரத்துக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். காயமடைந்த உறவினரான கங்கா (22) மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலராமபுரம் புன்னக்காடு சிரத்தல விளாகம் பொன்னம்மா (65) மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

கோழிக்கோடு கதீஜாகுட்டி (60)யும் தென்னை மரம் விழுந்து உயிரிழந்தார். தலச்சேரியில் தென்னைமரம் ஏறும் தொழிலாளி மனோகரன் (55), பானூரில் ஓடைக்குள் விழுந்து எம்.என்.ரவிச்சந்திரன் (66) ஆகியோர் உயிரிழந்தனர். கண்ணூரில் மதில்சுவர் இடிந்து தலையில் விழுந்து பெயிண்டர் கங்காதரன் (62) உயிரிழந்தார். காசர்கோட்டில் முகம்மது அல்சிபின் மகள் எல்கேஜி படிக்கும் பாத்திமாசைனப் (4) மழைநீர் தேங்கிய குட்டையில் விழுந்து உயிரிழந்தார். அடூரில் செனிய நாயக்(65) பயஸ்வினி ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். ஞாயிறு மாலை வரை பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளளது

Leave a Reply

You must be logged in to post a comment.