தஞ்சாவூர்,
தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தில், விவசாய பெண் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில், இயந்திர நடவுக்கு மானியம் வழங்கும் திட்டம், வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்பதோடு தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-“ தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்திற்காக டெல்டா மாவட்டத்திற்கு என 115 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்துள்ளது. விவசாயத் தொழிலில் நடவு இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக, ஏக்கர் ஒன்றுக்கு மானியமாக ரூ. 4 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. உத்தேசமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்களில் இயந்திர நடவிற்கு என ரூ. 40 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இந்த பணம் நடவு இயந்திரம் வைத்துள்ள முதலாளிகளுக்கு தான் போய் சேரும். ஒரு ஏக்கருக்கு சாதாரணமாக 15 பெண் தொழிலாளர்கள் நடவுப் பணியில் ஈடுபடுவது வழக்கமானது. டெல்டா மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் வேலை செய்யும் 15 லட்சம் பெண் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் இயந்திர நடவு காரணமாக பாதிக்கப்படுகிறது. டெல்டா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் இல்லை. நூறுநாள் வேலைத்திட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 24 கோடி என்பது டெல்டா மாவட்டத்தில் உள்ள 12 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமானதல்ல. இது “யானைப் பசிக்கு சோளப்பொரி” என்பது போலத்தான் உள்ளது.

எனவே, இயந்திர நடவுப் பணிகளை ஒதுக்கிவிட்டு பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு நடவுப்பணியில் வேலை வழங்கதமிழக அரசு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். நடவுமானியத்தையும் அவர்களுக்கே வழங்க வேண்டும்.” இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: