மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் மற்றும் கேரள வனப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி உள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது.சனியன்று இரவு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஆறாயிரம் கண அடியாக இருந்த நிலையில் ஞாயிறன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு பன்னிரெண்டாயிரம் அடியாக உயர்ந்தது.இதனால் மொத்தம் 100அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 98அடியை கடந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நான்கு மதகுகளும் திறந்து விடப்பட்டது. அணையின் நான்கு மதகுகள் வழியாக தற்போது வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் தற்போதைய நீர் வரத்தான ஒன்பதாயிரம் கன அடி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் முதல் சிறுமுகை வரையிலான ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பில்லூர் அணையின் உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் இதன் கிளையாறுகளான கல்லாறு, காந்தையாறு போன்ற காட்டாறுகளிலும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிதுள்ளதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.