பாட்னா:
‘நீட்’ தேர்வில் நாடுதழுவிய அளவில் முதலிடம் பிடித்தவர் மாணவி கல்பனா குமாரி. கல்பனா குமாரி, ‘நீட்’ தேர்வில் 720-க்கு 671 மதிப்பெண்கள் எடுத்தது மட்டுமின்றி பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், பீகாரில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 75 சதவிகித வருகைப்பதிவு தேவை எனும்போது, அவ்வளவு வருகை இல்லாமலேயே கல்பனா குமாரி எவ்வாறு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்? என்று அண்மையில் சர்ச்சைகள் கிளம்பின.பீகார் கல்வி அமைச்சரோ, இதுபோன்ற சர்ச்சையை யாரும் எழுப்ப வேண்டாம், பீகார் மாணவி அதிக மதிப்பெண் பெற்றுள்ளதை மட்டும் கொண்டாடுவோம் என்று சமாளித்தார்.
ஆனால் தற்போது பீகார் மாநில பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்விலேயே ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண்களை விடவும் மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ளனர். 100 சதவிகித மதிப்பெண்களுக்கான தேர்வில் சிலருக்கு 130 சதவிகித மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இயற்பியலில் 65 மதிப்பெண்கள் தேர்வுக்கும், 35 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பீம்குமார் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35-க்கும் அதிகமாக 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோலவே வேதியியலில் சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35 விட அதிகமாக 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. எழுத்து தேர்விலும் தனித்தனியாக போடப்பட்ட மதிப்பெண்களை கூட்டி பார்த்தால், வரவேண்டிய மதிப்பெண்களை விடவும் கூடுதலாக ‘இலவச’ மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளளன. எந்த கேள்விக்கும் பதில் அளிக்காதவர்களுக்கும் கூட மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கணிதத்தில் மூன்று விடையில் ஒன்றை தேர்வு செய்யும் அப்ஜெக்டிவ் டைப்பில் மொத்தம் 35 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் கிழக்கு சாம்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ராஜ் என்ற மாணவர் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதைவிட கொடுமையாக, வைஷாலி என்ற மாணவி உடல் நிலை சரியில்லாததால் உயிரியல் தேர்வை எழுதவே இல்லை. ஆனால் அவருக்கும் 20 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. செய்முறை தேர்வில் பெற்ற 18 மதிப்பெண்ணையும் சேர்த்து, உயிரியல் தேர்வில் அவர் 38 மதிப்பெண்கள் பெற்று பாஸ் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.பாஜக – ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீகாரைத் தவிர, வேறு எந்த மாநிலத்தில் நடக்கும் இவ்வளவு தரமான தேர்வு? எப்படி கிடைக்கும் எக்கச்சக்கமான மதிப்பெண்கள்? என்று மாணவர்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.