கோவை,
கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக நடைபெற்ற வட்ட மேசை விவாதத்தின் போது பாஜக, ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் இயக்குநர் அமீரை பேசவிடாமல் அராஜகம் செய்து நிகழ்ச்சியை பாதியில் முடிக்க செய்தனர். இந்த விவகாரத்தில் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு பாஜக பினாமி அரசு சங்பரிவார் அமைப்புகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வெள்ளியன்று கோவை எஸ்என்ஆர் கல்லூரி அரங்கில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், பாஜகவின் தமிழிசை, திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன், அதிமுகவின் செம்மலை, தாமாக ஞானதேசிகள், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, தமிழக குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது தமிழிசை, செம்மலை, ஞானதேசிகன் ஆகியோர் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடைபெற்று 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அரசிற்கு ஆதரவாக பேசினர்.
இதற்கு பாஜக கட்சியை சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைத்து பார்வையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கே.பாலகிருஷ்ணன், டி.கே.எஸ்.இளங்கோவன், உ.தனியரசு ஆகியோர் பேசினர். இதற்கு பார்வையாளர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இப்படியே முடிந்தால் ஒளிபரப்பின் போது, ஏற்கனவே மோடி மற்றும் பழனிச்சாமி அரசு மீது இருக்கும் அதிருப்த்தி மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது. இந்நிலையில் எப்படியாவது வட்டமேசை ஒளிப்பதிவு நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என திட்ட மிட்ட சங்பரிவார் அமைப்பினர், இயக்குநர் அமீர் பேசத்துவங்கிய உடனேயே ரகளையில் ஈடுபட துவங்கினர். அப்போது அனைவரும் தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பின்வாங்கினர்.
அதனை தொடர்ந்து அமீர் பேசும் போது, கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கோவையில் கலவரத்தில் ஈடுபட்டு கடைகளை சூறையாடி, காவல்துறை வாகனங்களை தீ வைத்தவர்கள் சமூக விரோதிகள் இல்லையா? அப்போது காவல்துறை ஏன் துப்பாக்கியை தூக்க வில்லை என கேள்வியை முடிக்கும் முன்பு.. அரங்கத்தின் இருந்து ஒட்டு மொத்த சங்பரிவார் அமைப்பினரும் திரண்டு சென்று அமீரை தாக்க முயன்றனர். அப்போது தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களும், காவல்துறையும் அவர்களை தடுத்து நிறுத்தி இயக்குநர் அமீரை பாதுகாத்தனர்.
அதன் பின்னர் நிகழ்ச்சியை முடித்தால்தான் கலைவோம் என்று விடாப்பிடியாக அராஜகத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை அவர்களை அங்கிருந்து அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடனே நிகழ்ச்சியை உடனே முடிக்க வேண்டும் என்று நெறியாளர் கார்த்திகை செல்வனிடம் காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தி நெருக்கடி கொடுத்தனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே நிகழ்ச்சி பாதியோடு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த செய்தி பெரியதாகி விடக்கூடாது என்ற நிலையில், இயக்குநர் அமீரை தாக்கி பிரச்சனையை திசைதிருப்பி அதன் மூலம் கலவரத்தை உண்டு பன்ன திட்டமிடுவதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து அமீரை கே.பாலகிருஷ்ணன், தனியரசு மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பாக பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இதனால் கோவைக்குள் தாக்குதல் தொடுக்க முடியாத சூழல் சங்பரிவார் அமைப்பினருக்கு ஏற்பட்டது.
அடுத்தாக அமீர், தனியரசுடன் திருப்பூருக்குதான் செல்வார் என்று நினைத்து முதலிப்பாளையம் அருகில் இரவில் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருந்திருக்கின்றனர். இந்நிலையில் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் காரில் கொடி கட்டி அந்த வழியாக சென்றிருக்கின்றனர். அதில் அமீர் இருப்பதாக நினைத்து அந்த காரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது உள்ளே இருந்து இறங்கியதில் அமீர் இல்லாத நிலையில் பாஜகவினர் அங்கிருந்து ஓடி ஒளிந்திருக்கின்றனர். இதுகுறித்து தனியரசு ஆதரவாளர்கள் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் சங்பரிவார் அமைப்புகளின் சதிவேலை அம்பலமான நிலையில், எப்படியாவது இந்த பிரச்சனையை திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கில் தற்போது, பாஜக மற்றும் அதிமுக அரசின் திட்டத்தின் படி வட்டமேசை விவாதம் நடத்திய புதிய தலைமுறை நிர்வாகம், மற்றும் செய்தியாளர் சுரேஷ் மற்றும் நிகழ்ச்சியில் பேசிய அமீர் ஆகியோர் மீது காவல்துறையினர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் 505- பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுதல், 153 ஏ- இரு பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்படுத்துதல், 3 ( 1) சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உடனே நிகழ்ச்சி குறித்து போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: