அர்ஜெண்டினா:
அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு இந்த உலகக் கோப்பை போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும்,2015, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கோபா அமெரிக்கா போட்டிகளிலும் இரண்டாம் இடம்பிடித்த அர்ஜெண்டினா இந்த முறை உலகக் கோப்பையை வென்று சாதிக்கத் துடிக்கிறது.குறிப்பாக மெஸ்ஸிக்கு ஏறக்குறைய இதுதான் கடைசி உலகக் கோப்பை என எதிர்பார்க்கபடுகிறது.கடைசி உலகக் கோப்பை தொடரில் கோப்பையுடன் விடைபெற மெஸ்ஸி விரும்புகிறார். கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அக்யூரோ, கிஹ்வெய்ன், டெபாலா போன்ற வீரர்கள் சொந்த நாட்டிற்காக விளையாடும்போது போதிய திறமையை வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.பயிறசியாளர் ஹோர்கே சாம்போலி எவ்வாறு அணியை வழிநடத்துகிறார் என்பதைப் பொறுத்து அணியின் முன்னேற்றம் அமையும்.தற்போதய உலகத் தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா 3-வது முறையாகக் கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முதல் சுற்றுப் போட்டிகள்:
ஜூன் 16 – ஐஸ்லாந்து
ஜூன் 21 – குரோசியா
ஜூன் 26 – நைஜீரியா

 

ஐஸ்லாந்து:
ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ஐஸ்லாந்து அணி எந்த சுற்று வரை முன்னேறும் என்பதை அவ்வளவு சாதாரணமாக கணித்துவிடமுடியாது.பயிற்சியாளரும் பல்மருத்துவருமான ஹெய்மிர் ஹால்க்ரிம்ஸனின் அபார பயிற்சியால் கடந்த யூரோ கோப்பை போட்டியில் இங்கிலாந்து போன்ற பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தி காலிறுதிவரை முன்னேறியது.அது மட்டுமல்லாமல் இந்த முறை உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் உக்ரைன், நெதர்லாந்து ஆகிய அணிகளைப் பின்னுக்குத்தள்ளி உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தகுதிபெற்றது. அந்த அணியின் திறமைக்குச் சான்றாகும்.கில்பி ஸிகர்தஸன்,ஆரோன் ஹுன்னர்ஸன் ஆகிய வீரர்கள் அணியின் பலமாவார்கள்.முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிக் களத்திற்கு வருகை தந்துள்ள கத்துக்குட்டி நாடானா ஐஸ்லாந்து அதிசயங்கள் நிகழ்த்தினால் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

முதல் சுற்றுப் போட்டிகள்:
ஜூன் 16 – அர்ஜெண்டினா
ஜூன் 22- நைஜீரியா
ஜூன் 26 – குரோசியா

குரோசியா:
தகுதிச் சுற்று ஆட்டங்களில் சற்று திணறிய குரோசிய அணி ப்ளே ஆப் சுற்று வழியாக தான் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.குரோசிய அணியின் பலம் என்பது அதன் நடுகள ஆட்டம்தான். ஸ்பானிஷ் கிளப் அணிகளில் விளையாடும் இவான் ராகிட்டிச், லூக்கா மோட்ரிச் போன்ற வீரர்கள் நடுகளம் மற்றும் முன்வரிசையில் தங்களது திறமையை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.மேலும் மரியோ மான்ஸுஹிச், இவான் பெரிஸிச், மாட்ரியோ கவாஸிச் போன்ற வீரர்கள் களத்தில் எந்த நிலையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்கள் ஆவர். 1988-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியது குரோசியா. தற்போது தரவரிசைப் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ள குரோசியா ஸ்லாட்கோ டாலிச் என்ற பயிற்சியாளரின் தலைமையில் சாதிக்கக் காத்திருக்கிறது. 

முதல் சுற்றுப் போட்டிகள்:
ஜூன் 17 – நைஜீரியா
ஜூன் 21 – அர்ஜெண்டினா
ஜூன் 26 – ஐஸ்லாந்து

நைஜீரியா:
உலகத்தரவரிசைப் பட்டியலில் 47-வது இடம்.1994, 1998, 2014 ஆகிய மூன்று முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களுக்கு முன்னேற்றம். கால்பந்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தவிர்க்க முடியாத சக்தி.அலெக்ஸ் இவாம்பி, கெலச்சி இலநாச்சோ, விக்டர் மோசஸ், அணித்தலைவர் ஜான் ஒபி மைக்கேல் என திறமைக்குக் குறைவில்லாத வீரர்களைக் கொண்ட நைஜீரியா கடந்த நவம்பரில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் முதலில் சொதப்பினாலும்,இரண்டாம் பாதியில் அர்ஜெண்டினா அணியை திணறவைத்து ஆட்டத்தை வெற்றியில் முடித்தது.இது எதிரணிகளுக்கு நைஜீரிய அணி விடப்படும் எச்சரிக்கையாகும். 

 

முதல் சுற்றுப் போட்டிகள்:
ஜூன் 17 – குரோசியா
ஜூன் 22 – ஐஸ்லாந்து
ஜூன் 26 – அர்ஜெண்டினா

Leave a Reply

You must be logged in to post a comment.