===மதுக்கூர் இராமலிங்கம்===
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததாகக் கூறி தற்கொலை செய்து கொண்டவர்கள் அந்த காரணத்திற்காகத்தான் இறந்தார்களா என்று ஆராய வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

இவர்தான் கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கூறியவர். இதை நம்பி காத்திருந்த பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்த தங்கை அனிதா தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது மரணத்தையும் இப்படித்தான் கொச்சைப்படுத்தினார்கள். ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து குடிசையில் அமர்ந்து மண்ணெண்ணெய் விளக்கில் படித்த அந்தக் குழந்தையின் மரணத்தை, காதல் தோல்வியாக இருக்குமோ என கதை கட்டினார்கள்.இந்த ஆண்டு நீட் தேர்வு எனும் கொடு வாளுக்கு விழுப்புரம் மாவட்டம் பெருவளூர் பிரதீபா, திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ ஆகியோர் பலியாகி உள்ளனர். சிபிஎஸ்இ நீட் தேர்வு என்ற பெயரில் குடும்பங்களையும் குதறியதால் இரண்டு தந்தைகளும் பலியாகியுள்ளனர்.மருத்துவக்கல்வியின் தரத்தை விண் அளவுக்கு உயர்த்துவதற்காகவும், தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தின் அடிப்படையிலும் தான் தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வை நடத்தி திறமையாளர்களை சலித்து சலித்து கண்டுபிடிப்பதாக மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், நீட் தேர்வு தொடர்பாகவும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கட்டணைக் கொள்கை தொடர்பாகவும் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சமூகத்தை மனநோயாளி ஆக்கும் வேலை
நீட் தேர்வில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி, நீட் நுழைவுத் தேர்வில் 691 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்று வி்ட்டதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவராகக்கூடிய அளவுக்கு இவருக்கு மூளை வளர்ந்து தலைக்கு வெளியே தொங்குவதாக ஊடகங்கள் அலறின. ஆனால், பீகாரில் ப்ளஸ் 2 படித்த இவர் பள்ளிக்கே செல்லாமல் தில்லியில் தங்கி நீட் தேர்வுக்காக மட்டும் படித்துள்ளார். இதனால் ப்ளஸ் 2 தேர்வு எழுதக்கூடிய அளவுக்கு அவருக்கு வருகைப் பதிவு இல்லை. ஆனாலும், அவர் பிளஸ் 2 தேர்வில் 500க்கு 433 மதிப்பெண் பெற்றுள்ளார் எப்படி என்று தெரியவில்லை. இவரது தந்தை பீகார் கல்வித்துறையில் உயர் பொறுப்பு வகிப்பவர். தாயார் ஆசிரியர்.இதே நிலை நீடித்தால், இனிமேல் பிரீகேஜி , எல்கேஜி கூட படிக்கமாட்டார்கள். நேராக நீட் தேர்வுக்கே அனுப்பிவிடுவார்கள். ஆஹா, இதுவன்றோ தகுதி… என்று புல்லரிக்கவும் தமிழகத்தில் சிலர் மலிவாக கிடைக்கவே செய்வார்கள்.
இப்போதே தமிழ்நாட்டில் உள்ள பிராய்லர் கோழி பள்ளிக்கூடங்கள் பிளஸ் 2 பாடத்தைவிட நீட்

தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத்தைத்தான் பிரதானமாக நடத்தி வருகிறார்கள். வழக்கமான தொகையை விட நீட் தேர்வு பயிற்சி என்று சொல்லி கூடுதலாக சில லட்சங்களை கறந்து கொள்கிறார்கள். படிக்கிற பிள்ளைகளுக்குத்தான் இரட்டைச்சுமை. மாநில பாடத்திட்டத்தையும் படிக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் படிக்க வேண்டும். இது தகுதிப்படுத்துகிற வேலையல்ல. மாணவ சமூகத்தை மனநோயாளி ஆக்குகிற வேலை.

இன்னொரு புறத்தில் வடமாநிலங்களில் நீட் தேர்வு வியாபாரம் கனஜோராக நடந்து கொண்டிருக்கிறதாம். தமிழகத்தைச் சேர்ந்த வசதி படைத்த சிலர் தில்லி, குஜராத் போன்ற இடங்களில் நடைபெறும் நீட் பயிற்சி மையங்களில் சேர்த்துவிடுகிறார்களாம். சிபிஎஸ்இ அதிகாரிகளோடு இந்த மையங்களுக்கு நெருக்கமான தொடர்பு உண்டாம். நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை முன்னதாகவே கொடுத்து, மாணவர்களை தயார் செய்யும் வேலை கூட உண்டாம். இதற்கு கடைசியில் தனியாக சில லட்சங்களை வசூலிப்பார்களாம்.

பாண்டி பஜாரில் சில்லரை விலைக்கு
சிபிஎஸ்இ புனிதமானது. அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று யாரும் இங்கே வந்து பொங்க வேண்டாம். மற்ற தேர்வு வாரியங்களில் வினாத்தாள்கள் கசியும். ஆனால் முன்பு பலமுறை சிபிஎஸ்இ வினாத்தாள்கள் வெள்ளமென பாய்ந்து வந்ததை நாடறியும்.
அதுவும் தமிழ்நாட்டு மாணவர்கள் என்று சொன்னால், சிபிஎஸ்இ தேர்வு வாரியத்திற்கு தனிப்பிரியம். தமிழ்நாட்டு மாணவர்கள் தகுதியற்றவர்கள் என்று நிரூபிப்பதற்கு என்னென்ன உண்டோ அவ்வளவும் செய்வார்கள். கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை கேரளம், ராஜஸ்தான் என மாற்றுவார்கள். வேறு எந்த மாநில மாணவர்களுக்கும் இந்தக் கொடுமை கிடையாது. ஏன் இப்படி என்று கேட்டால், கடைசி நேரத்தில் கட்டிடங்களின் தரத்தைப் பரிசோதித்து தேர்வு மையத்தை தேர்வு செய்ய முடியவில்லை என்பார்கள். தேர்வு மையத்தையே கண்டுபிடிக்க முடியாதவர்கள், எப்படி திறமையாளர்களை கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை.அப்படியும் தேர்வு மையத்திற்கு போய்விட்டால், உடல் உறுப்புகளை மட்டும் விட்டுவிட்டு, ஆடைக் கட்டுப்பாடு என்கிற பெயரில் அலங்கோலப்படுத்துவார்கள். அடுத்தாண்டு தேர்வு எழுத வரும் மாணவர்களின் கைகளை வெட்டினாலும் வெட்டுவார்கள். அப்படி செய்தால்தானே, திறமையை கண்டுபிடிக்க முடியும் என்று தொலைக்காட்சியில் தோன்றி நியாயப்படுத்தவும் சில பாஜகவினர் பாண்டி பஜாரில் சில்லரை விலைக்கு கிடைப்பார்கள்.

இந்த ஆண்டு நீட் தேர்வின் போது தமிழ்நாட்டில் பல்வேறு குளறுபடிகள்.மதுரையில் தமிழில் தேர்வு எழுத வந்த மாணவர்களில் சிலருக்கு இந்தியில் வினாத்தாளைக் கொடுத்து பீதி உண்டாக்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர், மாணவர் சங்கங்கள் களத்திற்குச் சென்று போராடிய பிறகு, வினாத்தாள் மாற்றித்தரப்பட்டது. தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளிலும் மொழிபெயர்ப்பில் தப்பும் தவறும் கொட்டிக் கிடந்தன. வினாத்தாளில் குளறுபடியிருந்தால், அந்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பது பொது விதி. ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை.

இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இவ்வளவு கூத்துக்களுக்குப் பிறகும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 45,336 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளிகளிலிருந்து தமிழ்மொழியில் தேர்வு எழுதிய 24,720 மாணவ-மாணவிகளில் 460 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகமான அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தவர்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இவர்களே பெரும்பாலான இடங்களை பெறுவார்கள். அங்கு ஆண்டு கட்டணம் 11, 600 ரூபாய் மட்டுமே. மதிப்பெண் குறைவாக பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அங்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ஆண்டுக்கு 3.85 லட்சம், பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால், ரூ.12.9 லட்சம் கட்ட வேண்டும். இது அறிவிக்கப்பட்டதுதான். அறிவிக்கப்படாமல் நிர்வாகம் வசூலிக்கும் கட்டணம் தனி. மொத்தத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது என்பது குதிரைக் கொம்பு.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சம் வரை வசூலித்துக் கொள்ளலாம் என மத்திய அரசே நிர்ணயித்துள்ளது. இதுதவிர, ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை நன்கொடை வசூலிக்கப்படும். இதில் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், பளபளப்பான போர்டுகளை மட்டுமே வைத்திருப்பவர்கள். மருத்துவக் கவுன்சில் ஆய்வுக்கு வரும்போது, பக்கத்து கல்லூரிகளில் கடனுக்கு ஆள்பிடித்து ஆசிரியராக நடிக்க வைத்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உண்டு.

இந்த லட்சணத்தில்தான் தகுதி…. தகுதி…. என்று ஒரு சிலர் குதி…குதி… என குதிக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்து விட்டு படித்து முடித்து வெளியே வருபவர்கள், ஏழை, எளியவர்களுக்கு வைத்தியம் பார்ப்பார்களா…? மருத்துவத்துறை கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்பரேட்டுகளின் கையில் சென்று கொண்டிருக்கிறது. அவர்களுக்கு மருத்துவரை தயார் செய்யும் வேலையைத்தான் நீட் என்கிற பெயரில் மோடி அரசு செய்து வருகிறது.

கல்வித்துறையை மொத்தமாக மாநில அதிகாரத்திற்கு மாற்றுவதும் , நீட் தேர்வை முற்றாக விலக்கி வைப்பதுமே இதற்கு ஓரளவு தீர்வாக அமையும். அதற்கு 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடு தழுவிய தேர்வில் மோடி வகையறா தோல்வி அடைந்தாக வேண்டும்.
அதுவரை, ஸ்டெதஸ்கோப் மாட்ட ஆசைப்பட்டு ஏமாற்றமடைந்த மாணவிகளின் மரணத்தை நிர்மலா சீத்தாராமன்கள் கொச்சைப்படுத்தாமலாவது இருக்கட்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.