ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பூதப்பாடி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜூன் 27ம் தேதி முதல் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் அருகே பூதப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பூனாச்சி, அம்மாப்பேட்டை, நெரிஞ்சிபேட்டை,சித்தார், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம் போன்ற பகுதிகளில் விளையும் பருத்தியை பூதப்பாடியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இப்பகுதிகளில் மேட்டுப்பாங்கான மற்றும் மானாவாரி சாகுபடியில் விளையும் பருத்திரகங்கள் தரமிக்கதாக இருப்பதால் ஏலத்தில் பங்கேற்று வாங்கி செல்வதற்காக நூற்பாலை அதிபர்களும், பருத்தி வியாபாரிகளும், மில் அதிபர்களும் அதிகளவில் வருகை தருவது வழக்கம். தற்போது பருத்தி பறிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், பறிக்கப்பட்ட பருத்தி ரகங்களை உலர்த்தி, பதப்படுத்தி அவற்றை விற்பனைக்காக கொண்டு செல்ல விவசாயிகள் ஆயத்தமாக வருகின்றனர். இந்நிலையில் பூதப்பாடி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜூன் 27ம் தேதி முதல் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்திஏலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஈரோடு வேளாண் விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: அந்தியூர் தாலுகா பூதப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருத்தி அறுவடை பருவம் துவங்க உள்ள நிலையில் வரும் ஜூன் 27ம் தேதி முதல் வாரந்தோறும் புதன்கிழமை 11 மணியளவில் பருத்திக்கு மறைமுக ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் தங்கள் பருத்தி பயிரை நன்கு உலர வைத்து, மண், தூசிநீக்கி, சுத்தம் செய்து பூதப்பாடி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்து கூடுதல் விலைக்கு விற்று பயனடையலாம். விவசாயிகளின் வங்கி கணக்கில் பருத்தி விற்பனை தொகை நேரடியாக வரவு வைக்கப்படுவதால், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் கார்டின் நகலை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: