தாராபுரம்,
நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 11 ஆம் தேதி கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கருப்பு கொடி ஏற்றிசங்கு ஊதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தென்தாரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அம்சராஜ் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் தமிழ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தமிழக அரசு பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், பழனி ஆகிய கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை தனியார் கம்பெனி நிர்வகிக்க ரூ. 2 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. மேலும், அனைத்து கோட்டங்களில் உள்ள சாலைகளையும் தனியாருக்கு வழங்கமுனைப்பு காட்டி வருகிறது. தமிழக அரசின் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட்டு அரசே ஏற்று நடத்தவேண்டும். சாலைபணியாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலமாக நிரந்தர ஊதிய தொகுப்பிலிருந்து வழங்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படும் நாளான 11 ஆம் தேதி சாலைப்பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதும் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.இந்தக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் கோதண்டபாணி, நிஜாம், மாநில செயலாளர்கள் கணேசன், கோவிந்தன், மகேந்திரன், சையது யூசுப் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.