===க.சுவாமிநாதன்===
வருடத்திற்கு 2 கோடி வேலைகள் என்பது மோடியின் வாக்குறுதி. கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான வேலைவாய்ப்புகளைத் தந்த ஆண்டு 2009 தான். அப்போது பாஜக ஆட்சியில் இல்லை. 10 லட்சம் வேலைவாய்ப்புகள் அப்போது அதிகரித்ததாக தொழிலாளர் துறையின் கணக்கீடு. ஆகவே வருடத்திற்கு இரண்டு கோடி என்றவுடன் எல்லோருக்கும் ஆச்சரியம்.

மோடிக்கு மார்க் நூற்றுக்கு ரெண்டு
ஆனால் நான்காண்டு அனுபவம் என்ன? “சும்மா கேளு… யார்ட்ட கேட்கிற… அண்ணன்ட்டதானே” என்கிற மாதிரி ஆகிவிட்டது அந்த வாக்குறுதி. 2015 ல் 1.55 லட்சம் வேலைவாய்ப்புகள் தான் புதிது. 2016-ல் 2.31 லட்சம் வாக்குறுதியில் ஒன்றரை சதவீதம், இரண்டு சதவீதம் தான். இதே ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகள் பறிபோனதும் நிகழ்ந்தது. 19000 பேர் ஆபரணங்கள், நகைகள் தொடர்பான வேலைகளை இழந்துள்ளனர். கைத்தறி, விசைத்தறியில் 11000 பேர். தோல், வாகனத் துறைகளில் தலா 8000 பேர். போக்குவரத்தில் 4000 பேர். இப்படியாக பறிபோன பட்டியல் தொடர்ந்தது.ஆனால் 2017-ல் பி.எப் செலுத்துபவர்கள் கணக்கு திடீரென எகிறியது. இதற்கு காரணம் ரொம்ப காலம் தொழிலாளர்களை சட்டரீதியான பயன்களைத் தராமலேயே, பல காலக் கெடுக்களை மீறி வந்தவர்களுக்கு அபராதமேதுமின்றி சில சலுகைகளுடன் அனுமதிப்பதாக அறிவித்தவுடன் தொழிலகங்கள் பி.எப் தொகையைக் கட்டியதுதான். இதை வைத்துக் கொண்டு வேலைவாய்ப்பு அதிகரித்து விட்டது என்று கதை கட்டினார்கள்.

ஆனால் சம்பளப்பட்டுவாடா தகவல்கள், தொழிலாளர் துறை தருகிற வேலைவாய்ப்பு விவரங்களோடு ஒப்பிடப்பட்டபோது மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடிந்தது. உதாரணமாக செப்டம்பர் 2017க்கும் மார்ச் 2018 க்கும் இடையில் 35 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் என சம்பளப்பட்டுவாடா தகவல்கள் தெரிவிக்கும் போது தொழிலாளர் துறையின் கணக்குகள் 2 லட்சமே புதிய வேலைவாய்ப்புகள் என்று காண்பித்தன. என்ன செய்வது?

2018-ன் பெரிய ஜோக்…..
தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட்டால்தானே இந்த வித்தியாசம்! அதையே நிறுத்துவது என முடிவு எடுத்துவிட்டார்கள். (தகவல் ஆதாரம்: எகானமிக் டைம்ஸ் – 08.06.2018). அதற்கு என்ன காரணம் சொல்வது? மேற்கூறிய செய்தியில் தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ள காரணங்களில் ஒன்று, “எட்டாவது காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வை நிறுத்தியுள்ளோம். காரணம், கள ஆய்வுகளைச் செய்து வேலைவாய்ப்பு பற்றிய புள்ளி விபரங்களைத் திரட்டுவதற்கான வேலையாட்கள் போதவில்லை” என்பதே. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் இதுவே.ஆனால் 2017 அக்டோபரில் அன்றைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கூறியத போன ஆண்டின் பெரிய ஜோக்காக இருந்தது.
வேலை தேடுபவரா? தருபவரா?

அம்மாநாட்டில் பேசிய அனில் பாரதி மிட்டல் (சேர்மன், ஏர்டெல்) இந்தியாவின் முதல் பெரிய 200 நிறுவனங்களில் பெருமளவு வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்பதைச் சுட்டிக்காட்டி இப்படியே போனால் சமூகத்தை நம்மோடு அழைத்துப் போக முடியாது என எச்சரித்தார். ஆனால் அதற்குப் பின்னர் மாநாட்டில் பேசிய பியூஷ் கோயல் “நான் அனில் பாரதி மிட்டல் பேசியதோடு ஒன்றைச் சேர்த்துக் கூற விரும்புகிறேன். நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைவது நல்ல அறிகுறிதான். ஏனெனில் நாளைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்க விரும்ப மாட்டார்கள். வேலை தருபவர்களாகவே மாற விரும்புவார்கள்” என்றார். எவ்வளவு குரூரம் பாருங்கள்! இந்த பியூஸ் கோயல்தான் இந்திய நிதியமைச்சகப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

வேலை தருபவரா இந்திய இளைஞர்கள்?
இந்திய இளைஞர்கள் வேலை தருபவர்களாக மாறுவார்கள் என்று பியூஷ் கோயல் சொல்வது உண்மையா! இந்தியாவில் வேலை தேடி சந்தைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சம் பேர். இவ்வளவு பேரில் எத்தனை பேர் வேலை தருபவர்களாக மாற முடியும்? இளைஞர்களின் கனவுலகமாக இருந்த விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் போன்ற நிறுவனங்கள் வேறு ஆயிரக்கணக்கான இளைஞர்களை வெளியே தள்ளுகின்றன. அவர்கள் எங்கே போவார்கள்?சுய வேலைவாய்ப்பு, முத்ரா திட்டம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடுகிறார்கள் ஆட்சியாளர்கள். இந்தியாவில் ஏற்கெனவே 50 சதவீதமான உழைப்பாளிகள் சுய வேலைவாய்ப்பில் உள்ளனர் என்பது உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. இதைத்தான் “வேலை தருபவர்” என்று பியூஸ் கோயல் கிரீடம் சூட்டிய இளைஞர்களாகச் சித்தரிக்கிறார். உண்மையில் இந்திய சுய வேலைவாய்ப்பை – அதாவது 24 கோடிபேர் – ஆய்வு செய்த பேராசிரியர் ஏ.கே.கோஷ் அறிக்கை கூறுவது என்ன?

நகர்ப்புறங்களில் சுய வேலைவாய்ப்பில் உள்ளவர்களில் 20 சதவீதமானவர்கள் மாதம் ரூ.3000 க்கு கீழே சம்பாதிப்பவர்கள் தான். கிராமப்புற சுய வேலைவாய்ப்பில் உள்ளவர்களில் மாதம் ரூ. 3000 க்கு கீழே சம்பாதிப்பவர்கள் 50 சதவீதத்திற்கும் மேலே. இவர்கள்தான் வேலை தருபவர்களாம்!

வேலை என்றால் உணவு, உடை, இருப்பிடம், கௌரவமான வாழ்க்கை என்ற தேவைகளையெல்லாம் உள்ளடக்கியது என்ற குறைந்தபட்ச சிந்தனைகள் கூட ஆட்சியாளர்களிடம் இல்லை.

“பக்கோடா” நகைச்சுவை அல்ல
பிரதமர் பக்கோடா விற்பதெல்லாம் வேலைவாய்ப்பு என்பதை நகைச்சுவையாக சொல்லவில்லை. ஆணவத்தோடும் சொன்னார் என்பதில்லை. உண்மையைச் சொல்கிறார். அதுதான் உலகமயத்தின் பொருளாதாரப் பாதை.அவர் சொல்லாமல் விட்ட ஒன்றுதான்.வால்மார்ட் போன்ற பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இன்று இந்தியாவின் பிலிப் கார்ட் போன் ற ஆன்லைன் வியாபார நிறுவனங்களை விழுங்க ஆரம்பித்துவிட்டன. இது சுயவேலை வாய்ப்புகளையும் குறிவைப்பதாகும். சிறுசிறு தொழில் முனைவுகளைக் கூட முளையிலேயே இது கிள்ளி எறிந்து விடும். 

அப்புறம் “பக்கோடா ’‘ வுக்கும் கூட ஆபத்து வந்துவிடலாம்!

Leave a Reply

You must be logged in to post a comment.