தாராபுரம்,
தாராபுரத்தில் நடைபெற்ற வீட்டுமனை பிரிவுகளை வரன்முறைபடுத்தி உரிய அனுமதியை வழங்கும் சிறப்பு முகாமில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில்அதிகாரிகள் உரிய ஏற்பாடு செய்யதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தாராபுரம் நகராட்சி மற்றும் கொளத்துப்பாளையம், முலனுர், ருத்திராவதி, கன்னிவாடி பேரூராட்சி மூலனூர், குண்டடம், தாராபுரம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 85 பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கு வரன்முறை படுத்தி அங்கீகாரம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாம் தாராபுரம் உடுமலைரோட்டில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதி பொதுமக்கள் காலை 7 மணியில் இருந்தே பத்திர நகல், ஆவணங்கள் மற்றும் வரைமுறைகட்டணத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகமானது. காலை 10 மணிக்கு அரங்கம் திறந்தவுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் மண்டபத்தில் இடம் பிடிக்க ஓடினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினர் அங்கு போடப்பட்டிருந்த சேர்களில் அமர்ந்த பொதுமக்களை தவிர மற்றவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கதவை பூட்டினர். பின்னர் உள்ளே இருந்தவர்களிடம் அங்கீகார அனுமதிக்கான மனுக்களை பெற்று கணினியில் பதிவு செய்தனர்.

இதில் போதுமான அதிகாரிகளும் கணினிகளும் இல்லாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெளியே காத்திருந்த பொதுமக்களிடம் மதியம் 3 மணிக்கு மேல் அளிக்கலாம் என கூறி டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனை பெறுவதற்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு பெண்கள் கீழே விழுந்தனர்.  இம்முகாமிலே அனுமதி வழங்குவதற்கு உத்தரவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரன்முறை கட்டணத்தை வங்கியில் செலுத்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு உத்தரவுகள் வழங்க வந்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சேலம் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் வாழவந்தானிடம் முகாமில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டது எனக் கேட்டபோது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது என கூறினார். இதில் திருப்தியடையாத ஆட்சியர் அதிகாரிகளிடம் இவ்வளவு மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் முறையான ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை என கண்டித்ததுடன் இரவு எவ்வளவு நேரமானாலும் முகாமிற்கு வந்த அனைவருக்கும் உத்தரவுகளை வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் ஆட்சியர் பழனிச்சாமி 25 பேருக்கு அங்கீகாரத்திற்கான உத்தரவுகளை வழங்கிவிட்டு சென்றார்.

ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம் நடக்கும் பகுதியில் கூடியதால் உடுமலைரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யபடவில்லை. அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் எனத்தெரிந்திருந்தும் அதற்கேற்றாற்போல் ஏற்பாடுகளை செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளனார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.