மேட்டுப்பாளையம்,
ரசாயன தொழிற்சாலைக்கு தடை விதிக்கக்கோரி காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சி,கரியன்குட்டை என்னுமிடத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ஹெக்சேன், அசிட்டோன், ஆல்கஹால், மெத்தனால், காஸ்மிக் அமிலம், போன்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துவதால் அப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்தொழிற்சாலைக்கு அருகே அமைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணை நீர் ஆலையின் ரசாயன கழிவுநீரால் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், தொழிற்சாலையை சுற்றியுள்ள நஞ்சனூர், வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், கண்டியூர் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் பாழாகி, விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இத்தொழிற்சாலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இயற்கை சூழலும்,வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, இந்த ரசாயன தொழிற்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், இந்த தொழிற்சாலைக்கு தடை விதிப்பது குறித்து வியாழனன்று பேச வருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் எங்களை அழைத்திருந்தார். ஆனால், தற்போது எங்களை சந்திக்க மறுத்து வெளியில் சென்றுவிட்டார் என புகார் தெரிவித்தனர். மேலும், இப்பிரச்சனை தொடர்பாக உரிய தீர்வு காணும் வரை ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனக்கூறி அலுவலக படிகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கை மனு மாவட்ட நிர்வாகஅதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.