திருப்பூர்,
உலக பஞ்சு சந்தையில் நடப்பு ஆண்டில் (2018 – 19) பஞ்சின் விலை கடுமையாக உயரும் என்று மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக நடப்பு ஆண்டில் பஞ்சின் உற்பத்தியை விட தேவை அதிகரிக்கும் நிலையில் உலக அளவில் வேறு பல காரணங்களாலும் பஞ்சு விலை உயரும். ஜவுளித் தொழிலின் மூலப்பொருளான பஞ்சு விலை உயர்ந்தால் அதன் தொடர்ச்சியாக நூல் விலையும் உயரும், எனவே ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக உலகின் மிகப்பெரிய பஞ்சு நுகர்வாளரான சீனா, இந்த ஆண்டு இறக்குமதி வரியைக் குறைத்து, அதிக அளவுக்கு பஞ்சு இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் பருத்தி விளைச்சல் பரப்பில் ஏறத்தாழ நான்கில் மூன்று பகுதி கடும் வறட்சியால் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.

எனவே உலகச் சந்தையில் பஞ்சு இறக்குமதி செய்யசீனா தீர்மானித்துள்ளது. அதேசமயம் உலகின் முக்கிய பருத்தி உற்பத்தி நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலும் பருத்தி விளையும் பகுதிகளில் பருவ நிலை மாறுபாட்டால் பருத்தி உற்பத்தி குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பூச்சித் தாக்குதலால் பருத்தி உற்பத்தி சரிவடைந்துள்ளது. உலகளவில் சீனா, அமெரிக்கா, இந்தியா என மூன்று முக்கிய நாடுகளிலும் பருத்தி உற்பத்தி குறையும் நிலையில், சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. எனவே பஞ்சு விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாசிங்டன் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட பஞ்சு ஆலோசனைக் கமிட்டி 2018 – 19இல் பருத்தி உற்பத்தி 25.75 மில்லியன் டன் அளவாக இருக்கும். அதே சமயம் நுகர்வுத் தேவை 26.72 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பஞ்சு விலை ஏறத்தாழ 25 சதவிகிதம் என்ற அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. தேவைக்கும், உற்பத்திக்கும் இடையில் இருக்கும் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஊக வணிக கொள்ளையர்களும் சந்தையின் முக்கிய தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் பருத்தி ஏற்றுமதி செய்வோருக்கு அதிக வருமானம் கிடைக்கலாம். ஆனால் பஞ்சை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கக்கூடிய பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில் துறை மிகக் கடும் பாதிப்பைச் சந்திக்கும். குறிப்பாக உள்நாட்டு ஜவுளித் தொழிலின் தேவைக்கு ஏற்ற சந்தை கொள்கையை அரசு பின்பற்றவில்லை. எனவே ஊக வணிக வர்த்தகர்கள் உள்நாட்டுத் தேவையைப் புறக்கணித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையே குறிக்கோளாகக் கொள்வர். எனவே உள்நாட்டில் மிகக்கடும் பாதிப்பு ஏற்படும். பருத்தி விலையில் 25 சதவிகிதம் உயர்வு என்பது மிக மிக கடுமையானதாகும்.

எனவே உலக பருத்தி சந்தையில் தற்போது கணிக்கப்பட்டுள்ள நிலையை கவனத்தில் கொண்டு இந்திய ஜவுளி மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் உள்நாட்டு ஜவுளி தொழிலுக்கு தேவையான பஞ்சு நியாயமான விலையில் போதுமான அளவுக்கு கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கையை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்று ஜவுளி துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.