திருச்சிராப்பள்ளி:
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்த உத்தமர்கோயில் திருவள்ளுவர் அவென்யூவில் வசிப்பவர் கண்ணன் (43). இவரது மனைவி செல்வி(32). இவர்களுக்கு சுபஸ்ரீ (17) என்ற மகளும், மித்ரஜித் (13) என்ற மகனும் இருந்தனர்.கண்ணன் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஆவார். இவர் அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். சுபஸ்ரீ பிளஸ் 2 தேர்வில் 907 மதிப்பெண் பெற்றார். டாக்டராக விரும்பிய சுபஸ்ரீ நீட் தேர்வை எழுதினார். நீட் தேர்விற்காக ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். இருந்த போதிலும் சுபஸ்ரீயால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த சுபஸ்ரீ யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர்.

புதனன்று இரவு சுபஸ்ரீ தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். இதில் சந்தேகமடைந்த அவரது தந்தை கண்ணன் கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் உடனடியாக கண்ணன் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து சுபஸ்ரீ உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சுபஸ்ரீயின் தந்தை கண்ணன் கூறுகையில்: டாக்டராக வேண்டும் என்பது எனது மகளின் கனவு. நீட் தேர்விற்காக இரவு 12 மணிவரை படிப்பார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து படிக்க தொடங்கி விடுவார். ஆனால் நீட் தேர்வில் சுபஸ்ரீ 24 மார்க் தான் எடுத்தார். மருத்துவ படிப்பு இல்லாவிட்டால் என்ன வேறு சிறந்த படிப்பில் சேர்த்து விடுகிறேன் என சமாதானப்படுத்தினேன். ஆனால் சுபஸ்ரீ இந்த முடிவை தேடிக்கொள்வார் என நான் நினைக்கவில்லை என கண்ணீர் விட்டபடி கூறினார். வியாழனன்று காலை 10.45 மணியளவில் உடற்கூறாய்வு முடிந்து சுபஸ்ரீயின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுபஸ்ரீயின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள், உறவினர்கள், அவருடன் படித்த தோழிகள் கதறி அழுதனர்.சுபஸ்ரீயின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படாமல் நேராக ஓயாமாரி சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அருணன், அமமுக மாவட்டச் செயலாளர்கள் மனோகரன், ராஜசேகரன், திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் சுபஸ்ரீயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நீட் தேர்வால் கடந்த ஆண்டு அரியலூர் அனிதாவின் உயிர் பறிபோனது. இந்தாண்டு விழுப்புரம் மாவட்டம் பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா(18), திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்கள் மத்தியில் கவலையையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.