எலச்சிப்பாளையம் ,
எலச்சிப்பாளையம் அடுத்த எலிமெட்டில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள எலிமேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி தொழில் செய்து வரும் இங்குள்ள மக்கள், பல்வேறு பணிகளுக்காக ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வெளியூர்களுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் எலிமேடு பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலான பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எலிமேடு மற்றும் சுற்றுபுற கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் வெளியூர்களுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் எலிமேடு பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் வெளியூர் சென்று எலிமேடு வர பேருந்து ஏறினால், பேருந்து நடத்துனர்கள் பேருந்து எலிமேட்டில் நிற்காது என்று கூறி பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் கடும் அவதிக்குள்ளாகின்றோம். ஆகவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்துபேருந்துகளும் எலிமேடு பேருந்து நிறுத்தத்தில் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.