கோவை,
கோவையில் தொழில் அதிபர் ஒருவரை கத்திமுனையில் மர்ம கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை லட்சுமில்லை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜான் கோ பிடல். இந்நிலையில் வியாழனன்று மதியம் இரண்டு கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் ஜான்கோபிடல் அலுவலகத்திற்கு வந்தனர். வணிக நிறுவனம் மற்றும்  நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் கொண்ட இப்பகுதியில் நுழைந்த அந்த கும்பல் அலுவலகத்தின் முன்புள்ள கண்ணாடி கதவை ஆவேசமாக உடைத்தனர். பின்னர் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து வேலை செய்யும் பெண்களைக் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தினர். இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜான்கோபிடலை காரில் கடத்திச் சென்றனர்.

மேலும் நிறுவனத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கடத்தல் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக தொழில் விஷயமாக, தன்னை ஒருவர் மிரட்டி வருவதாக ஏற்கனவே காவல்நிலையத்தில் தொழிலதிபர் ஜான்பிடல்கோ புகார் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.