திருப்பூர்,
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்து தடுக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி எதிரில் வியாழனன்று இந்த ஆர்ப்பாட்டம் தி.க. மாவட்டத் தலைவர் இரா.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாநகர தலைவர் இல.பாலகிருட்டிணன் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் நளினம் நாகராஜ், தலித் விடுதலைக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் விடுதலைச்செல்வன்,அவினாசி ஒன்றிய திக பொறுப்பாளர் ஆ.பொன்னுசாமி ஆகியோர் உரையாற்றினர். ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலுக்குள் இந்தியக் குடியரசுத் தலைவர் அனுமதிக்கப்படவில்லை. இது இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்ட சவால். இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதற்கு பதிலாக சாதி ஒழிக்கப்பட்டது என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

வருணாசிரம முறையால் இந்தியா வன்முறைக்காடாத் தான் இருக்குமே ஒழிய, ஒருக்காலும் சுதந்திர நாடாக இருக்கமுடியாது சாதியை, தீண்டாமையைக் காப்பாற்றும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. வருணாசிரமத்தையும், பாஜக வையும் விரட்டியடிக்க வெகுமக்கள் விழிப்போடு போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசியோர் கூறினர். ஆர்ப்பாட்ட முடிவில் திருப்பூர் மாநகர திக செயலாளர் பா.மா.கருணாகரன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.