ஈரோடு,
சேலம் – கோவை வரையிலான என்எச்-47 சாலையில் அதிகரிக்கும் விபத்தை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வியாழனன்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் முதல் கோவை வரையிலான என்எச்-47 ரக சாலையை பாரத் பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தியதற்கு மத்திய அரசுக்கு நன்றி. இதில் சேலம் முதல் செங்கப்பள்ளி வரையிலான சுமார் 103 கி.மீ தொலைவில் 4 வழி மற்றும் 8 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தனை தூர இடைவெளி உள்ள சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்படாமல் இருப்பதால் அதிகப்படியான வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிகப்படியான சிரமத்திற்குள்ளாவதுடன், தினமும் வாகன விபத்து அரங்கேறி வருகிறது.

குறிப்பாக, பெருந்துறை-கஞ்சிக்கோவில்-கவுந்தபாடி, பெருந்துறை-துடுப்பதி- மக்கினாம் கோம்பை, கொளத்துப்பாளையம்-விஜயமங்கலம், பெருந்துறை-பெத்தம்பாளையம் – கஞ்சிகோவில் ஆகிய குறுக்குச் சாலைகளில் தினமும் வாகன விபத்து நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மேம்பாலம் அமைக்கப்படாதது தான். இதேபோல், விஜயமங்கலம் சுங்கச்சாவடியின் இரு பக்கங்களிலும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதனால் குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்வதற்காக வாகன பாதை எதுவும் அமைக்கப்படாத வகையில் அதன் கட்டமைப்பு உள்ளது. ஆகவே, இருசக்கரம் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் செல்லுவதை கருத்தில் கொண்டு விஜயமங்கலம் பகுதி சுங்கச்சாவடியின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து விரைவில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.