கோவை,
சுகாதாரத்துறையில் நடைபெறும் ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்திய கோவை ஊரக சுகாதாரத்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ததை கண்டித்து வியாழனன்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் கோவை மாவட்ட பொதுசுகாதாரத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இத்துறையின் இயக்குநராக பானுமதி உள்ளார். முன்னதாக, இவர் உதகையில் அதிகாரியாக பணியாற்றி வந்த சமயத்தில் பணி நியமனம் செய்ததில்ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற புகாரின் அடிப்படையில் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், இதுதொடர்பான விசாரணை தற்போதும் நடைபெற்று வருகிறது. இதன்பின்னர் கோவையிலும் ஓட்டுனர் பணி நியமனம் செய்வதில் துவங்கி பல்வேறு வகையான முறைகேடுகளில் பானுமதி ஈடுபட்டு வருவதாக, ஊரக பொது சுகாதாரத்துறையின் கண்காணிப்பாளராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளராகவும் உள்ள சிவக்குமார் புகார் தெரிவித்து வந்துள்ளார்.

மேலும், சமீபத்தில் சுகாதாரத்துறை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் தனக்கு வேண்டிய நபர்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காக அத்தேர்தலையே நடைபெறாமல் பார்த்துக்கொண்டார். இதனை சிவக்குமார் ஊழியர்களிடமும், பொதுவெளியிலும் அம்பலப்படுத்தியுள்ளார்.இதனால் பெரும் ஆத்திரமடைந்த பானுமதி, ஆளும்கட்சி மற்றும் உயர் அதிகாரிகளிடமுள்ள நெருக்கத்தை பயன்படுத்தி சிவக்குமாரை விழுப்புரம் மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்தியதால் ஊழியர்களை பழிவாங்கும் பானுமதியின் நடவடிக்கையை கண்டித்தும், பணியிடை மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வியாழனன்று கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் ரங்கராஜ், ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் முருகேசன், கிராம செவி
லியர் சங்கத்தின் பிரகலதா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: