நாமக்கல்,
நாமக்கல் அருகே சேந்தமங்கலம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுகாதாரமற்ற வகையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஞாயிற்றுகிழமைகளில் வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் சேந்தமங்கலம் மட்டுமின்றி அருகிலுள்ள காரவள்ளி, கொல்லிமலை, பொட்டணம், காளப்பநாயக்கன்பட்டி, அக்கியம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதேபோல், கொல்லிமலை மலைவாழ் பழங்குடி மக்கள் வாரம் ஒரு முறை சேந்தமங்கலம் வந்து தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதோடு, கொல்லிமலையில் விளையும் பலா, வாழைப்பழம் மற்றும் இதர சிறுதானியங்கள் முதலியவற்றை விற்பனைக்கும் எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் வருகை புரியும் இந்த சேந்தமங்கலம் வாரச்சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படாததால் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காய்கறிகள் போன்ற உணவு பண்டங்களை விற்பனை செய்ய இங்கு போதிய கடைகள் இல்லாமல், சுகாதாரமற்ற வகையில் மண் தரையில் வைத்து காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் காய்கறி மற்றும் உணவு பண்டங்களில் மண் துகள்கள், தூசுகள் படிகின்றன. எனவே சேந்தமங்கலம் வாரச்சந்தையில் போதுமான அளவிற்கு கடைகள் அமைத்து, உணவு பண்டங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சுகாதாரமான வகையில் விற்பனை செய்யும் வகையில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேந்தமங்கலம் முதுக்காப்பட்டி கிளைச் செயலாளர் சதாசிவம் கூறுகையில்: சேந்தமங்கலம் வரலாற்று பெருமைமிக்க ஒரு சிறிய நகரமாகும். இங்குள்ள வார சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக, காய்கறிகள், மளிகை சாமான்களை மண் தரையில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சுகாதார மற்ற முறையில் உணவு பண்டங்களை விற்பனை செய்வதால் அந்த பொருட்களை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு உடல் நலன் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று சேந்தமங்கலம் வார சந்தைக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

– வீரமணிகண்டன்

Leave a Reply

You must be logged in to post a comment.