நாமக்கல்,
நாமக்கல் அருகே பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து வீணாகி வருவதை அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பதாக பொது
மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாமக்கல் அருகே மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து மிகப்பெரிய அளவிலான குடிநீர் குழாய் மூலம் குடிநீர் எடுத்து வரப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் அருகே கோட்டை மெயின் சாலையில் ஏ.எஸ். பேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வெளியேறும் குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடி வருகிறது. இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு போதியளவிற்கு குடிநீர் விநியோகம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ச்சியாக குடிநீர் வீணாகி வருகிறது. இவ்வாறு அடிக்கடி இங்கு குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் குடிநீர் குழாய் உடைப்பை முறையாக சரிசெய்வதில்லை. இதனால் நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் குடியிருப்பு, ஏ.எஸ் பேட்டை போன்ற பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதிகுள்ளாகி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.