ஜூன் 6, 2018 :

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் காவல்துறையினரின் உதவியோடு சமூகவிரோத சக்திகளால் தலித் மக்கள் கடந்த 50ஆண்டுகளாக சொல்லமுடியாத துன்பம் துயரங்களோடு வாழ்கிற நிலைமை உள்ளதால் மக்கள் அச்சத்தோடு உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கச்சநத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்தார்.

கச்சநத்தத்தில் கடந்த 28ந்தேதி அன்று இரவு தலித் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தியதில் 3பேர் கொல்லப்பட்டனர். 5பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏரளாமான வீடுகள் சேதமுற்றுள்ளன. 3பேரின் உடலை வாங்க மறுத்து காத்திருக்கும் போராட்டம் மதுரை அரசு மருத்துவமனையில் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் கடுமையானதை தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மதுரையில் கச்சநத்தத்திற்கு வருகை புரிந்தனர். அதன்பின்பு   3பேரின் உடற்கூறு ஆய்வு நடந்தது. 03.06.2018 அன்று கச்சநத்தம் கிராமத்தில் அடக்கம் நடந்தது. அரசு பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அறிவித்துள்ளனர். ஜீன் 6ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன்,முத்துராமலிங்கபூபதி,வீரையா,வீரபாண்டி,பொன்னுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன்,ஈஸ்வரன்,உலகநாதன், மானாமதுரை ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி ஆகியோர் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தார்கள்.

மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட தலித் மக்களை சந்தித்தார். கச்சநத்தம் கிராமத்தில் மலைச்சாமி என்பவர் கோயம்புத்தூரில் பணி செய்கிறார். அவரை வீட்டிலிருந்து தூக்கி வந்து வாத்தியார் மனோகரன் வீட்டு முன்புவைத்து வெட்டியிருக்கிறார்கள். வீட்டின் முன்பு ரத்தம் கிடப்பதை மக்கள் காண்பித்தார்கள். தற்போது மலைச்சாமி மதுரையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். கொலைவெறித்தாக்குதலில் உயிரிழந்த சண்முகநாதன் என்ற மருது என்பவர் வீட்டிற்குள் ரத்தமாக கிடப்பதை பார்வையிட்டார். பின்னர் இங்குள்ள எல்சிடி டிவி உடைக்கப்பட்டிருப்பதை காண்பித்தார்கள். மாற்றுத்திறனாளியான கணேசன் என்பவர் வீட்டு ஓடு உடைக்கப்பட்டிருப்பதை காண்பித்தார்கள். காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் எம்எஸ்சி படித்து முடித்து உயர்படிப்பு படிக்க உள்ள சுகுமாறன் என்பவரை மாடியிலிருந்து கீழே வரவழைத்து வெட்டி ரத்தவெள்ளத்தில் கிடத்திய இடத்தை காண்பித்து ரத்தம் தோய்ந்துபோயிருப்பதை காண்பித்தார்கள். ராணுவத்தில் பணிபுரிகிற தெய்வேந்திரன் தந்தை ஆறுமுகம் என்பவரை வீட்டினுள் இருந்து வெளியே இழுத்து வீட்டு முன்னரே வெட்டியதில் உயிரிழந்தார். அந்த இடத்தில் ரத்தம் கருப்பாகிபோனதை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களிடம் காண்பித்தார்கள்.

பின்னர் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விபரம் வருமாறு, ”கச்சநத்தம் தலித் மக்கள் மீது நடந்த வன்கொடுமைத்தாக்குதல் நடந்தவுடனே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு மதுரையில் கச்சநத்தம் மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர் போராட்டத்தில் முழுமையாக கிராம மக்களோடு இரவும்,பகலும் உடன் இருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுத்திருக்கிறார்கள். கச்சநத்தம் கிராம தலித் மக்கள் கடந்த 50வருடமாக சொல்ல முடியாத துன்பம் துயரங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். கச்சநத்தம் கிராமத்திற்கு கிடைக்கவேண்டிய கண்மாய் தண்ணீரை கிடைக்கவிடாமால் செய்திருக்கிறார்கள். சிறப்பாக செயல்பட்ட பால் பண்ணையை செயல்படவிடாமால் செய்துவிட்டார்கள். கச்சநத்தம் கிராமத்தில் செயல்பட்ட கூட்டுறவு சங்கத்தை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள். ஆடு,கோழி வளர்க்க முடியாத நிலை உருவாகி உள்ளது. பிடித்து தின்றுவிடுகிறார்கள். இங்கு எந்த நேரத்திலும் சமூக விரோத செயல்கள் பகிரங்கமாக நடக்கிறது. போதை பொருள் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடக்குது. தொடர் அராஜகம் நடக்கிற பகுதி தமிழகத்தில் எங்காவது இருக்கிறதா? என்று சந்தேகமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் தலித் மக்கள் தினம் தினம் செத்து செத்து வாழ்கிறார்கள். ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போது காவல்துறையிடம், வட்டாட்சியரிடம், மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்திருக்கிறார்கள். சமூகவிரோதிகள் மீதும், உயர்சாதி வெறியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமால் சமூக விரோதிகளுக்கு பக்கபலமாக காவல்துறை செயல்பட்டு வந்துள்ளது. சமூக விரோதிகளை பாதுகாப்பதில் செலுத்திய அக்கறையால் தலித் மக்கள் மூன்றுபேர் பலியாகியிருக்கிறார்கள். 5பேர் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே காவல்துறையை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். இரு அதிகாரிகளை சஸ்பென்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்களை கிரிமினல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு. இதன்காரணமாக இவ்வழக்கில் காவல்துறையினர் இருவரையும் சேர்த்து கைது செய்யவேண்டும். இதை செய்தால்தான் இதுபோன்ற கொடுமைகள் குறையும். ஒரு சிலரையாவது சேர்த்து நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வன்கொடுமைகள் ஒரளவுக்கு குறையும்.

கச்சநத்தம் கிராம பெண்களும்,ஆண்களும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். காவல்துறை பத்து நாட்கள் இருந்துவிட்டு செல்கிற பிரச்சனையல்ல. காவல்துறை அணுகு முறையை மாற்றி கைது செய்யப்பட்ட 16 பேரையும் ஜாமீனில் விடாதபடி செய்து 60 தினங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 90 தினங்களில் வழக்கை முடித்து தீர்ப்பு பெற வேண்டும். ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி காவல்துறை எடுக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து கொள்கிறோம். கச்சநத்தம் கிராம தலித் மக்கள் வெளியே போகமுடியாத நிலையில் உள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும். கடன் வசதி செய்து தர வேண்டும்.

தமிழகத்தில் தலித் மக்கள் வெட்டி கொலை செய்கிற செயலுக்கு தமிழகம் தலைகுனிய வேண்டும். தமிழகத்தில் பெரியார், சிங்காரவேலர் வாழ்ந்த பூமியில் இக்கொடுமை நடப்பதை தடுக்க வேண்டும். சாதிய ஒழிப்பு போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் இயக்கமாக செய்து வருகிறோம். சாதிய பிடிமானத்தை தகர்க்க வேண்டும். கச்சநத்தம் கிராம தலித் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சுடுகாடு என்பது மாற்றப்பட வேண்டும். ஒரு கிராமத்தில் அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்கிற முறையை கொண்டுவர வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை செயல்படுத்த வேண்டும். இவையெல்லாம் சாதி ஒழிப்பு நடவடிக்கையாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்வது சாதி ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படங்கள்

Leave a Reply

You must be logged in to post a comment.