திருப்பூர்,
திருப்பூரில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு பேசிய சம்பளத்தை  தராமல் முதலாளிகள் ஏமாற்றுவது, சம்பளம் வாங்கி வரும்போது சமூக விரோதிகள் வழிமறித்து பறித்துச் செல்வது, ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடந்தால் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை செய்வது என பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

திருப்பூர் அவிநாசிகவுண்டம்பாளையம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம் சார்பில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட மாநிலத் தொழிலாளர்கள் சார்பில் சந்தோஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், செயலாளர் எம்.என்.நடராஜ் ஆகியோர் உரையாற்றினர். அத்துடன் சிஐடியு பஞ்சாலை சங்க நிர்வாகி கே.பழனிசாமி, ஆர்.காளியப்பன் ஆகியோரும் பேசினர்.

புலம் பெயரும் தொழிலாளர்கள்:
திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் கடந்த பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் வேலைக்கு வந்துள்ளனர். குறிப்பாக சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட்,ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இங்கு குடியேறி வேலை செய்து வருகின்றனர். எனினும் இவர்களுக்கு உரிய சட்ட, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. அவ்வப்போது இவர்கள் ஏமாற்றப்படுவது போன்ற தனித்தனி சம்பவங்கள் வெளி வருவதுண்டு. இந்த நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து கண்டறியவும், உரிய தலையீடு செய்யவும் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம் சில ஆண்டு காலமாக தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியில் ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்திற்கு திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக அங்கேரிபாளையம், ஸ்ரீ நகர், பெருமாநல்லூர், நெருப்பெரிச்சல், பொங்குபாளையம் உள்பட பல இடங்களில் இருந்தும் சுமார் நூறு தொழிலாளர்கள் வந்திருந்தனர். இதில் அந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதும் அடுக்கடுக்காக அவர்கள் பிரச்சனைகளைக் கொட்டினர். அதிர்ச்சி அளிக்கும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்கள் நிலை பாதுகாப்பு இல்லாமல் பரிதாபமாக இருப்பதும் தெரியவந்தது.

பலவித தாக்குதல்கள்
குறிப்பாக பனியன் தொழிற்சாலைகளில் பேசி நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை முதலாளிகள் தருவதில்லை. வேலை முடிந்தபிறகு ஏதேனும் காரணம் சொல்லி ஆயிரக்கணக்கான ரூபாயைப் பிடித்தம் செய்து கொள்வதாகக் கூறி சம்பளத்தின் ஒரு பகுதியை அபகரித்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் மொழி மற்றும் மாற்று மாநிலம் என்பதால் எதற்கு வம்பு என கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு செல்கின்றனர். மற்றொரு பக்கம், சனிக்கிழமைகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு செல்லும்போது சமூகவிரோதிகள் வழிமறித்து மிரட்டி, அடித்து செல்போன் மற்றும் சம்பளப் பணத்தை மொத்தமாக பறித்துக் கொண்டு செல்கின்றனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர்.

மேலும், வாடகைக்கு எடுக்ககூடிய வீடுகளில் வடமாநிலத்தோர் என்றால் நபருக்கு ரூ.1000 என 6 பேர் வரை தங்க வைத்து ரூ.6 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். போதிய அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. எனவே வாடகையை வரைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது.இதைத் தவிர, சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏதேனும் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நடந்துவிட்டால், வட மாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்து காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அவ்வப்போது தொந்தரவு செய்வதும் நடைபெறுகிறது. வேலை செய்யும் இடத்திலும், வசிக்கும் இடத்திலும் என பல விதமான நெருக்கடிகள், அச்சுறுத்தலான சூழலில் வாழ்ந்து வருவதை வடமாநிலத் தொழிலாளர்களின் பேச்சு வெளிப்படுத்தியது.

புதிய கிளை உதயம்
இந்த சூழலில் சிஐடியு தலைவர்கள் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, பாதுகாப்பாக இருப்பதற்கு சங்கமாக செயல்படுவது பற்றி குறிப்பிட்டனர். இதன் தொடர்ச்சியாக வட மாநிலத் தொழிலாளர்களுக்குப் புதிய கிளை அமைக்கப்பட்டது. இந்த புதிய கிளைத் தலைவராக பிரதான் குமார், செயலாளராக சந்தோஷ், பொருளாளராக பிண்டு குமார் உள்பட 13 பேர் கொண்ட கிளை கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு பனியன் சங்கம் மேற்கொண்டிருக்கும் இந்த பணி வட மாநிலத் தொழிலாளர்களுக்கு சட்ட உரிமைகள், சமூகப் பாதுகாப்பு கிடைப்பதற்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்திருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.