திருப்பூர்,
தமிழக அரசுத் துறையில் பணிநிரவல் என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அவுட் சோர்ஷிங் விடும் அரசாணை எண் 56-ஐ கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசுத் துறைகளில் பணித்தன்மைக்கு ஏற்பவும், பணிப்பளுவிற்கு ஏற்பவும் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாமல் அனைத்து துறைகளும், பல ஆண்டுகளாக திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஆதிசேஷய்யா தலைமையில், அரசாணை எண்:56 இன்படி பணியாளர் மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் அனைத்துத் துறைகளின் நிர்வாகத்தை முழுமையாக முடக்கக்கூடிய அபாயம் உள்ளது. தேவையற்ற பணியிடங்கள் என்று வகைப்பாடு செய்வதோ, அவுட் சோர்ஷிங் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இது அரசு நிர்வாகத்தை பாதிப்படைய செய்வதோடு, பொது மக்கள் நலனையும் வெகுவாக பாதிக்கும்.

எனவே, ஆதிசேஷய்யா குழுவினை உடனடியாக கலைத்து, அரசுத்துறையில் உள்ள பணியிடங்களை பாதுகாக்க வேண்டும், காலி இடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ச.முருகதாஸ், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.ஞானத்தம்பி கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கிளை பொறுப்பாளர் தி.இளங்கோவன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: