கோவை,
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்தை கண்டித்து ஜூலை 2ல் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக்குவது என முற்போக்கு மற்றும் தலித் அமைப்பின் நிர்வாகிள் பங்கேற்ற கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது. எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. தலித் மக்களுக்கு அநீதி இழைக்கும் இந்த சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு, ஜனநாயக, தலித் அமைப்புகள் ஒன்றினைந்து ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை கோவையில் வெற்றிகரமாக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் ஆறுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் நிலாமணிமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கா.சோமசுந்தரம், ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், தமிழ்புலிகள் அமைப்பின் இனியவன், திராவிட விடுதலை கழகத்தின் மாவட்டச் செயலாளர் நேருதாஸ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அமுதா, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ரத்தினகுமார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் கேப்டன் பிரபாகரன், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் ஜூலை 2 ரயில் மறியல் போராட்டத்தை விளக்கி கோவை மாவட்டத்தில் வலுவான பிரச்சார இயக்கங்களை அனைத்து அமைப்புகளும் இணைந்து மேற்கொள்வது. ரயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க செய்து வெற்றிகரமாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

ஈரோடு:
இதேபோல் ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விநாயகமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை பெருமாவளவன், வீர கோபால், மா.ஆறுமுகம், ஆதித்தமிழர் கட்சி எ.அறிவழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பழனிசாமி, மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, அருந்ததியர் இளைஞர் பேரவை வடிவேல், தமிழ் புலிகள் கட்சி விஸ்வநாதன், திராவிட கழக மாநில துணைத் தலைவர் த.சண்முகம், விடுதலை வேங்கைகள் கட்சி மாணிக்கம், ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்கம் சென்னியப்பன், சண்முகம், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் விஜயராகவன், மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் எஸ்.வி.மாரிமுத்து, பி.சடையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ஈரோட்டில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் 10 ஆயிரம் பேரை பங்கேற்க செய்வது. இதுதொடர்பாக ஒன்றிய மற்றும் கிராம அளவிலான பிரச்சார கூட்டங்களை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: