===பேராசிரியர் கே. ராஜு====
“ஒவ்வொரு வெற்றிபெற்ற மனிதருக்குப் பின்னணியிலும் ஒரு பெண் இருக்கிறார்” என்பது பிரபலமானதொரு பொன்மொழி. இந்த பொன்மொழி மற்ற பல துறைகளுக்குப் பொருந்தி வருவதைப் போலவே விண்வெளித் துறைக்கும் பொருந்தி வருகிறது. கடந்த அறுபதாண்டு விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்த்தால், அது ஆண்களுடைய கோட்டையாகவே இருந்து வந்திருப்பது புலப்படும். ஆனால் அந்த வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால், விண்வெளித் துறையில் பெண்களுக்குரிய பங்கினை அளித்திடாத காலகட்டத்திலுமே கூட, தைரியமும் ஆர்வமும் உள்ள சில பெண்கள் அத்துறையில் மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொணர தங்கள் பங்கினை ஆற்றியே வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.அவர்களுடைய தொடர்ந்த முயற்சிகளின் காரணமாக நிலைமை வேகமாக மாறிவருகிறது. மனிதர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிய நாட்களில் தாங்கள் விரும்பிய விமானப் போக்குவரத்து, விண்வெளித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மேற்படிப்பிற்குச் சேருவதற்குக் கூட பெண்கள் போராட வேண்டியிருந்தது. விண்வெளிப் பயணத்திற்கு பெண்களும் தகுதியானவர்கள்தாம், ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகப் பார்வையில்தான் தடைகள் இருந்தன என்பதை நிரூபிக்க வேண்டிய மிகப் பெரிய சவால் பெண்கள் முன் இருந்தது. ரஷ்யாவின் வாலெண்டினா தெரெஷ்கோவாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் மனத்தடைகளை அகற்றி மற்ற பெண்களும் விண்வெணிப் பயணம் மேற்கொள்வதற்கான கதவுகளைத் திறந்துவிட்டது.

தொழில்நுட்பப் பொறுப்புகளில் பெண்கள் அமர்ந்தபிறகு, அவர்களுடைய திறனும் நிர்வாகமும் பல நேரங்களில் ஆண்களைவிட நம்பிக்கைக்குரியவையாகவே இருந்தது தெளிவானது. விண்பயணத்தை தரையிலிருந்து கண்காணிக்கும் பொறியாளர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் விண்வெளித் தொழில்நுட்பம் வளர பெண்கள் அளித்த பங்கு சிறப்பானது. தங்களது தனித்துவம் மிக்க பங்களிப்புகளினால் விண்வெளித் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற சில பெண்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.பூமியில் இருக்கும்வரை நாடுகளுக்கிடையில் பல அரசியல் வேறுபாடுகளும் பிளவுகளும் இருப்பினும் விண்வெளிக்குப் போனபிறகு அவையெல்லாம் காணாமல் போய்விடும் விந்தையைப் பார்க்க முடிகிறது. செயற்கைக் கோள்களை ஏவுவது, விண்வெளி ஆராய்ச்சிகள், பயணம் மேற்கொள்ளப் போகும் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தல், பயணம் தொடர்பான பிற செயல்பாடுகள் ஆகிய விண்வெளிப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் வளர்ந்த நாடுகளும் மற்ற நாடுகளும் இணைந்து செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. உலகின் விண்வெளி பற்றிய கண்ணோட்டத்தை உலக சமாதானத்திற்கான செயல்திட்டமாக மாற்றியமைத்த ஒரு பெண்தான் டாக்டர் எய்லின் காலோவே. விண்வெளியை போர்க்களமாக இன்றி மனித சமூகத்திற்குப் பயன்தரும் வளமாகப் பார்க்க முடியும் என அவர் உலகிற்கு எடுத்துக் காட்டினார். `விண்வெளிச் சட்டத்தின் அன்னை’ என்றும் `விண்வெளியின் பெருமைக்குரிய பெண்மணி’ என்றும் அவர் அன்புடன் கொண்டாடப்பட்டார்.

1958-ல் ரஷ்யா முதன் முதலாக ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளை ஏவியபோது, அது போர்த் தொழில்நுட்பத்தில் ஒரு ஏவுகணையாகப் பின்னர் மலரக் கூடும் என்ற பயம் உலகையும் குறிப்பாக அமெரிக்காவையும் வாட்டியது. ரஷ்ய சாதனைக்கு எதிர்நடவடிக்கையாக அப்போது அமெரிக்க செனட்டராக இருந்த லிண்டன் பி.ஜான்சன் தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிறுவனம் (NASA) தொடங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தார். அதற்குத் தேவையான விவரங்களைச் சேகரித்துத் தருமாறு அவர் டாக்டர் காலோவேயைக் கேட்டுக் கேட்டுக் கொண்டார். பொறியாளர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்களைக் கலந்தாலோசித்த டாக்டர் காலோவே, தகவல் தொடர்பு, விண்ணியல் ( (meteorology) , பயணம், ஆராய்ச்சி, அறிவியல் பரிசோதனைக் களம் போன்று விண்வெளி மனித சமுதாயத்திற்குப் பயன்படும் களமாக இருக்க வேண்டுமே தவிர, போர் நடவடிக்கையாக அதைப் பார்க்கக் கூடாது என வலியுறுத்தினார்.ஜான்சனும் அவரது பரிந்துரையை ஏற்றுக் கொண்டார். விண்வெளி ஆராய்ச்சியை சமாதான நடவடிக்கைகளுக்காகக் பயன்படுத்த ஒரு ஐ.நா. குழு (COPUOS) அமைக்கப்பட வேண்டுமென டாக்டர் காலோவே பரிந்துரைத்தார். தொலைநோக்கில் உலகிற்கு பல நன்மைகளைத் தரக்கூடிய பரிந்துரை இது என உணர்ந்த பிற நாடுகள் கருத்தொற்றுமை அடிப்படையில் இணைந்து செயலாற்றுவதற்கு முன்வந்தனர்.

(அடுத்த வாரமும் கட்டுரை தொடர்கிறது)

Leave a Reply

You must be logged in to post a comment.