சேலம்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செவ்வாயன்று வாலிபர் சங்கத்தினர் கண்டன நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆகவே, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிபோட்டுள்ள எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் பங்கேற்றோர் சைக்கிள்களை ஓட்டி தங்களது எதிர்ப்பை காட்டினர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர்
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்க நகர தலைவர் நவநீதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் வாழ்த்திப் பேசினார். இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானசேகர், சம்பத், நகர செயலாளர் சின்னசாமி, துணை செயலாளர் ஹனிபா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனம் மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர்சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவிக்குமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் லெனின், பொருளாளர் மணிகண்டன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கோவை
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சீலாராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில், மாவட்ட நிர்வாகிகள் தீபக்சந்திரகாந்த், மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: