பனாஜி:
இந்திய அரசியலமைப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கோவா மாநில கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான பிலிப் நென் பெர்ராவ் கூறியுள்ளார். தற்போதைய சூழலில், நாட்டில் தனி மனித உரிமைக்கு மதிப்பில்லாமல் போய் விட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளுக்கு, பிலிப் நென் பெர்ராவ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘தற்போது அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் உள்ளது. இதனால் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது நாம் என்ன உண்ண வேண்டும்: எந்த உடை உடுத்த வேண்டும் மற்றும் எவ்வாறு கடவுளை வழிபட வேண்டும் என கட்டளை இடுவது நாட்டில் அதிகரித்து வருகிறது. தனிமனித உரிமை மதிக்கப்படுவது இல்லை. வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு சிறுபான்மையினரின் நிலம் மற்றும் வீடுகள் பறிக்கப்படுகின்றன. அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்களாகவே உள்ளனர்’.இவ்வாறு பிலிப் நென் பெர்ராவ் கூறியுள்ளார்.‘விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில், நாம் நமது அரசியலமைப்பை ஆபத்தில் இருந்து மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக ஆட்சியில் நாடு அபாயகரமான அரசியல் சூழலில் உள்ளதாக தில்லி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான அனில் கௌடோ-வும் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.