புதுதில்லி:
பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் படையெடுத்து வருவதாகவும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ஆனால், இந்தியப் பங்குச் சந்தைகள் மற்றும் கடன் சந்தைகளில் ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ. 29 ஆயிரத்து 714 கோடியை எடுத்துக் கொண்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடித்திருப்பது, மத்திய அரசே அளித்த புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மே மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து ரூ. 10 ஆயிரத்து 60 கோடியும், கடன் சந்தையிலிருந்து ரூ. 19 ஆயிரத்து 654 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ. 29 ஆயிரத்து 714 கோடி அந்நிய முதலீட்டாளர்களால் திரும்பப் பெறப்பட்டு இருப்பதாகவும், இது 2016 நவம்பர் மாதம் திரும்பப் பெறப்பட்ட ரூ. 39 ஆயிரத்து 396 கோடி முதலீட்டிற்குப் பிறகு, மிக அதிகபட்சமான தொகை என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மார்ச் மாதத்தில் ரூ. 2 ஆயிரத்து 662 கோடியை, இந்தியப் பங்குச் சந்தையில் கூடுதலாக முதலீடு செய்திருந்தனர். ஆனால், அடுத்த மாதமே (ஏப்ரல்) ரூ. 15 ஆயிரத்து 561 கோடி அளவிற்கான முதலீடுகளை அவர்கள் திரும்பப் பெற்றனர். இது மே மாதத்தில் ரூ. 29 ஆயிரத்து 714 கோடியாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், ‘கச்சா எண்ணெய் விலை உயர்வே அந்நிய முதலீடுகள் அதிகளவில் திரும்பப் பெறப்பட்டதற்கு காரணம்’ என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இது இத்துடன் நிற்காது என்றும், கச்சா எண்ணெய் விலை உயர்வானது, நிதிப்பற்றாக்குறை, பண வீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.