===ஆர். ரமணன்=== 
தூக்கம் நமக்கு மட்டும்தானா? இல்லை மரம் செடி கொடி விலங்குகள் எல்லாம் தூங்குமா?நமக்குள் சிர்க்கேடியன் கடிகாரம் ஒன்று இருக்கிறது;அதன்படிதான் நமக்கு தூக்கமும் விழிப்பும் வருகிறது என்பதுதெரிந்ததே.ஆனால் இந்தக் கடிகாரம் மிகச் சிறிய பேக்டீரியா முதற்கொண்டு மிகப் பெரிய மரங்கள் வரை எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று அல்லவா?சூரியன் மறைந்தவுடன் அனைத்து உயிர்களும் உறக்கத்திற்கு செல்லுவது என்பது என்ன ஒரு அற்புதமான காட்சி!தாவரங்கள் தூங்குவதை சங்க இலக்கியத்தில் ‘தம்புகழ்க் கேட்டார் போல் தலை சாய்ந்து
மரம் துஞ்ச’என்று குறிப்பிடப்படுகிறது.

கருவாகை மரத்தின் சிற்றிலைகள் அடிப்புறமாக மடிந்து கூம்பியிருக்கும்.இவ்வியல்பை நாக்டேர்னல் மூவ்மென்ட் (Nocturnal movement) என்பர்.இதனால் இது ‘தூங்குமூஞ்சி மரம்’எனப்படும் என்கிறார் சங்க இலக்கியங்களில் தாவரங்கள் என்ற நூலில்முனைவர் கு. சீ.வாசன், அந்தி மந்தாரை அல்லது அந்தி மல்லிகை நாலரை மணிக்கு பூப்பதையும் அவரது நூலில் குறிப்பிடுகிறார்.

‘காலையில் மலரும் தாமரைப்பூ அந்திக் கருக்கலில் மலரும் அல்லிப்பூ’ என்று மலர்களின் உறக்கத்தையும் விழிப்பையும் திரைப்படப் பாடலில் பாடிவைத்தார் கவிஞர்.கிராமத்து மக்களும் தோட்டக்காரர்களும் தாவரங்கள் உறங்குவது குறித்து அறிவர்.ஐந்தரை மணி வாகை அந்தி மந்தாரை போன்ற பெயர்கள் அந்த தாவரங்களின் தூக்க நேரத்தை குறிக்கின்றன.திருவிளையாடல் படத்தில் வருவதுபோல‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்பது சூரியனைக் குறிப்பதாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் தூக்கத்திற்கும் விழிப்பிற்குமான ஜீன்கள் எல்லா உயிரின செல்களிலும் இருக்கிறது என்கிறார் தூக்கத்திற்கான ஆய்வுகளை நடத்தும் மைக்கேல் திவ்ரி(Michael Twery) என்பவர் அதாவது தூக்கம் விழிப்பு என்கிற சுழற்சி எல்லாவற்றிற்கும் பொதுவானது. டார்வினும் தாவரங்கள் இரவில் தூங்குவதை சொல்லியிருக்கிறார். இன்னொரு ஆய்வாளர் இருட்டு அறையிலும் தாவரங்களின் இலைகள் மூடுவதும் திறப்பதும் நடப்பதைக் கண்டிருக்கிறார்.

இதுவரை இந்த ஆய்வுகள் சிறிய தொட்டிச் செடிகளில்தான் நடைபெற்றுள்ளது. இப்பொழுது பிர்ச்மரங்கள் இரவில் தூங்குவதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.Frontiers in Plant Scienceஎன்ற இதழில் இது குறித்த கட்டுரை வந்துள்ளது. ஒரே சமயத்தில் ஆஸ்திரியாவிலும் பின்லாந்திலும் சம இரவு பகல் (equinox) காலத்தில் காற்றில்லாத ஒரு நாளில் லேசர் கதிர்களை மரங்களின்மீது செலுத்தி அதன் வடிவங்கள் மாறுவதை பதிவு செய்திருக்கிறார்கள்.இரவில் அதன் இலைகள் பத்து சென்டிமீட்டர் அளவில் தொங்கிப்போகின்றன.இரவில் ஒளிச்சேர்க்கை இல்லை என்பதால் மரத்திற்குள் இருக்கும் நீரின் அழுத்தத்தை குறைத்துக்கொண்டு இதைச் செய்கின்றன.பகலில் சூரிய ஒளியை நோக்கி கிளைகளை நீட்டவேண்டியிருப்பதால் தன்னுடைய சக்தியை சேமித்து வைத்துக் கொள்ளும் விதமாக இவ்விதம் செய்கின்றனவாம்.இந்த ஆய்வுகள் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன.2016 ஆம் ஆண்டு நடந்த இந்த ஆராய்ச்சிக்குப்பின் 2017ஆம் ஆண்டு வெவ்வேறு மரங்கள் வெவ்வேறு விதமான தூக்க நேரங்களைக் கொண்டிருக்கின்றன என்பதையும் கண்டுள்ளார்கள். தூக்கம் மூளையின் ஒரு பகுதியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று முதலில் கருதப்பட்டது.இப்பொழுது அதில் கண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விலங்குகளில் பகலில் விழித்திருப்பது இரவில் விழித்திருப்பது, என இரண்டு வகை உள்ளன.கண்களிலிருந்து மூளைக்கு செல்லும் தூக்க சமிஞ்க்ஞைகள் இந்த இரண்டு வகை விலங்குகளிலும் வெவ்வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றனவாம்.

இதனுடைய நடைமுறை பலன் என்னவென்றால் மரங்களுக்குள் இருக்கும் ஈரப்பதத்தை கண்டுபிடிக்கமுடியும்.ரப்பர் மற்றும் மரத் தொழிலில் இதைப் பயன்படுத்த முடியும்.தகவல் திரட்டுக்கு உதவிய கட்டுரைகள்.

1.MSN இணைய தளத்தில் (29/04/2018)வந்த கட்டுரை-Vienna University of Technology, TU Vienna.-Eetu Puttonen
2.University of California – Irvine-Qun-Yong Zhou
3.தொல் அறிவியல் துறை ஆய்வாளர் முனைவர் கு. சீ. நிவாசன் எழுதிய சங்க இலக்கியங்களில் தாவரங்கள் என்ற ஆய்வு நூல்தமிழ்ப் பல்கலைக்கழகம்

Leave A Reply

%d bloggers like this: