கோவை,
கோவை மத்திய சிறையில் கைதிகள் மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீதிமன்றத்திற்கு கடந்த மே மாதம் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள் சிலர் தங்களை சிறைக்காவலர்கள் கடுமையாக தாக்கி வருவதாக நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக நீதிமன்ற வளாகத்திலும் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் தொடர்ந்து கோவை சிறையில் அத்துமீறல்கள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக, கோவை சிறையில் இரண்டு மாத காலத்தில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட கைதிகள் தற்கொலை மற்றும் மர்மமான முறையில் இறந்துபோனது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிறை அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் சார்பில் வழக்கறிஞர் கணேஷ்குமார் கோவை மத்திய சிறையில் ஆய்வு நடத்தினார். இதில் சிறையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது உண்மைதான் என தீக்கதிர் நாளிதழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருந்தார். இதில், சிறைக்கொட்டடியில் சௌந்திரராஜன் என்ற கைதி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்
சித்த சம்பவம் மற்றும் சிறையில் கைதிகளின் மீது நடைபெறும் துன்புறுத்தல், அத்துமீறல்கள் குறித்து விரிவாக தெரிவித்திருந்தார்.குறிப்பாக, இங்குள்ள கைதிகளை சிறைக்காவலர்கள் கடுமையாக தாக்குவதாகவும், தன்னை 36 முறை சீர்திருத்த சிறையில் வைத்து கடுமையாக தாக்கியதாகவும் கைதி ஒருவர் புகார் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். மேலும், இதுபோன்று பல கைதிகளின் ஆடைகளை களைந்து கடுமையான தாக்குதல் நடத்தி சித்தரவதைக்கு ஆளாக்கப்படுவதாகவும் புகார் அளித்த விபரங்கள் குறித்து விவரித்திருந்தார். இதன்காரணமாக கோவை மத்திய சிறையில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் செவ்வாயன்று கோவை மத்திய சிறையில் கைதிகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஒரு கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த மாதம் அடிதடி வழக்கு ஒன்றில் பீளமேடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதேபோல் கோவை பேரூரை சேர்ந்த விஜய் என்பவரும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் செவ்வாயன்று கோவை மத்திய சிறையில் உள்ள 3 ஆவது டவர் பிளாக்கில் ஒருவொருக்கொருவர் ஆவேசமாக மோதிக்கொண்டனர். இதில், விஜய் என்கிற கைதி ரமேஷை கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ரமேஷின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து நடைபெறும் மர்ம மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.