திருப்பூர்,
திருப்பூர் 12-வது வார்டில் சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரத்தை அடுத்த செல்லம்மாள் காலனி 1,2,3 ஆகிய வீதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த 3 வீதிகளில் இருந்து செல்லம்மாள் காலனி மெயின் வீதி வழியாக கழிவுநீர் செல்லும் வகையில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 3 வீதிகளில் உள்ள கால்வாய் தாழ்வாகவும், மெயின் வீதியில் உள்ள கால்வாய் மேடாகவும் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுவதுடன் அடிக்கடி கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. மேலும், மழை காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து கால்வாய் நிரம்பி கழிவுநீர் அனைத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில், அந்த பகுதி மக்கள் சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம்கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், கோரிக்கை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க காரணதால் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று காலை சாமுண்டிபுரம் குமார்நகர் ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த 1-வது மண்டல உதவி ஆணையர் வாசுக்குமார், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் 15 வேலம்பாளையம்காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்லம்மாள் காலனி பகுதியில் இருந்து கழிவுநீர் எளிதாக செல்லும் வகையில் சாக்கடை கால்வாயை ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். கால்வாயை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடனடியாக சாக்கடை கால்வாயை மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

மேலும் கால்வாயை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆணையர் வாசுக்குமார் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.