கோவை,
கச்சநத்தத்தில் சாதிய ஆதிக்க சக்தியினர் நடத்திய கொலை வெறியாட்டத்தை கண்டித்து கோவையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதிய ஆதிக்க சக்தியினர் நிகழ்த்திய கொலை வெறியாட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் செவ்வாயன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞனாம், மனித சிவில் உரிமை கழகத்தின் தேசியக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். தலித் மக்களின் புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிந்தீரன், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் மு.ஆனந்தன், ஜோதிகுமார், கோபால் சங்கர் மற்றும் ஜோதிபாசு, மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: